

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பிரச்சினை காரணமாக நீதிமன்றம் வரை சென்று தள்ளிப்போனது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தவெக தலைவர் விஜய், தனது 'ஜன நாயகன்' படத்திற்கு கூட்டு சேர்ந்து பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த சூழலில், நேற்று முழு படமும் இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இந்தப் படத்தின் பதிப்பை யார் வெளியிட்டார்கள் எனத் தெரியாத நிலையில், அதை யாரும் பகிர வேண்டாம் என படக்குழு வக்கீல் நோட்டீஸ் அளித்திருந்தது.
இந்த நிலையில், சேரன் தனது எக்ஸ் தளத்தில் ஜன நாயகன் திரைப்படத்தின் லீக் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் “ஒரு திரைப்படம் வாட்டர்மார்க் போட்டு அனுப்பப்படுகிறது என்றால் அது டப்பிங், எஸ்எப்எக்ஸ், ரீரிக்கார்டிங், டிஐ, மிக்ஸ் இந்தத் துறைகளுக்குதான் செல்லும். அந்தத் துறைகளுக்கு மட்டும்தான் வாட்டர்மார்க் போடுவோம். இல்லை, ஏதாவது வியாபார விஷயம் என்றால் For Businesse purpose, Festival copy, Censor copy என போடுவோம்.
எல்லா காட்சிகளையும் தொகுத்து அனுப்பும் எடிடில் இருந்து இதுவரை Edit Ref என்று or Edit copy என்று அனுப்பியதே இல்லை. அதுவும் எடிட்லதான் படமே ரெடியாகும்... அப்போது அவங்களுக்கு அந்த watermark போட்டு எப்படி வரும்... ஜனநாயகன் குழு இதை தீவிரமாக விசாரிக்கனும் அல்லது போலீஸ் இதை தீவிரமாக விசாரிக்கனும்.. எங்கயோ தவறு உள்ளிருந்தே நடந்திருக்கு. Edit Ref னு போடும்போது அதுல final mix copy யா இருக்க வாய்ப்பில்லை... Jan14 தேதி குறிப்பிடப்பட்டிருக்கிறது.. கிட்டத்தட்ட படம் வெளியாகி 5 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய நேரம்.. அதுவும் water mark ரொம்ப தெளிவா வெள்ளை நிறத்தில் பளிச்சின்னு இருக்கு..
ஆக இந்த களவு edit துறை சார்ந்தவர்களை வீணாக குற்றவாளிகளாக்கும்.. அல்லது மற்ற கலைஞர்களின் நன்மதிப்பைக் கெடுக்கும்.. அறிவார்ந்த திரைத்துறை நண்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து அடுத்த கட்ட விசாரணைக்கு ஒத்துழைக்கவும்... களவு நமது துறை ஆட்களால் நடந்ததா அல்லது நமது துறையைப் பயன்படுத்துகிறார்களா என சிந்திக்கவேண்டும். ஆனால், பெரும் முதலீட்டில் எடுக்கப்பட்ட திரைப்படத்தை திருடர்கள் மனசாட்சியின்றி வெளியிட்டு இப்படி தரம் கெட்டு நடப்பதை ஒரு இயக்குனராக கண்டிக்கிறேன். ஜனநாயகம் கேள்வியாகி கொண்டிருக்கிறது.. நடவடிக்கை தேவை” என கூறியுள்ளார்.