அடுத்த "ஜேம்ஸ் பாண்ட்" இயக்குநரை அறிவித்த பட நிறுவனம்

'டூன்' இயக்குனர் டெனிஸ் வில்லெனுவே அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். கிரைம் திரில்லர் படங்கள் என்பதால், எல்லா வயதினரும் அந்த படங்களை ரசிப்பர். இதுவரை 25 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. தொலைக்காட்சி தொடர்கள், காமிக்ஸ் புத்தகங்கள், கார்ட்டூன்கள் என ஏராளமானவை ஜேம்ஸ் பாண்ட் பெயரில் உலகம் முழுவதும் வெளியாகி, ரசிகர்களை கவர்ந்துள்ளன. அந்த அளவுக்கு ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டது. அந்த பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர்களும், பெரும் புகழ் அடைந்து விடுகின்றனர். சீன் கானரி தொடக்க கால படங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தார். அவருக்கு பிறகு ரோஜர் மூர், ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்து புகழ் பெற்றார்.
கடைசியாக வெளியான 5 படங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தவர் டேனியல் கிரேக். கடைசியாக 2021ல் 'நோ டைம் டூ டை' என்ற படம் வெளியானது. அதன் பிறகு ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் கடந்த 2021-ம் ஆண்டு நடிகர் டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் இருந்து விலகினார். எனவே அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. விரைவில் புதிய 26-வது ஜேம்ஸ் பாண்ட் யார் என்பதை அறிவிக்க உள்ளது.
இந்த நிலையில் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்தை தயாரிக்கும் உரிமையை முதன்முறையாக பெற்றுள்ள அமேசானின் எம்ஜிஎம் ஸ்டுடியோ, அதன் இயக்குநர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'டூன்' பட இயக்குநரான டெனிஸ் வில்லெனுவே அடுத்த 'ஜேம்ஸ் பாண்ட்' படத்தை இயக்க உள்ளார். கனடா நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான வில்லெனுவே, 'சிகாரியோ,' 'டூன்,' 'டூன்: பகுதி இரண்டு,' 'பிளேட் ரன்னர் 2049,' மற்றும் 'அரைவல்' போன்ற படங்களுக்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுள்ளார்.
ஆமி ஆடம்ஸ் மற்றும் ஜெர்மி ரென்னர் நடித்த அறிவியல் புனைகதை படமான 'அரைவல்' படத்திற்காக 2017 ஆஸ்கார் விருதுகளில் சிறந்த இயக்குனராகவும், எழுத்தாளர் பிராங்க் ஹெர்பர்ட்டின் மிகவும் பாராட்டப்பட்ட 1965 நாவலை அடிப்படையாகக் கொண்ட 'டூன்' படத்திற்காக சிறந்த தழுவல் திரைக்கதைக்காகவும் 2022 ஆஸ்கார் விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக வில்லனுவே கூறுகையில், "நான் ஒரு தீவிர பாண்ட் ரசிகன். பாரம்பரியத்தை மதிக்கவும், வரவிருக்கும் பல புதிய பணிகளுக்கான பாதையைத் திறக்கவும் நான் விரும்புகிறேன். இது ஒரு மிகப்பெரிய பொறுப்பு," என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.






