விமர்சனத்தால் நோகடித்தாலும் மலையாள சினிமா எனக்கு பிடித்திருக்கிறது - அனுபமா பரமேஸ்வரன்

பல தடைகள் வந்தாலும், மலையாள சினிமாவில் பணியாற்றுவது எனக்கு பிடித்திருக்கிறது என்று அனுபமா பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
'பிரேமம்' படம் மூலம் மலையாளம் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர், மலையாள நடிகர் சுரேஷ் கோபியுடன் நடித்துள்ள 'ஜானகி வெட்ஸ் ஸ்டேட் ஆப் கேரளா' என்ற திரைப்படம் வருகிற 27-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனுபமா, 'எனக்கு நடிக்க தெரியாது என்று பலரும் விமர்சிக்கின்றனர்' என்று ஆதங்கப்பட்டு கூறியிருந்தார்.
அவருக்கு நடிகர் சுரேஷ் கோபி, "இது மலையாள சினிமாவில் இருக்கும் பெரிய பிரச்சினை. சிம்ரன், நயன்தாரா, அசின் போன்ற நடிகைகளும் இந்த பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறார்கள்" என்று அனுபமாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இந்த பேச்சு மலையாள சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அனுபமா பரமேஸ்வரன் சமீபத்திய பேட்டி ஒன்றில், "மலையாள சினிமாவில் என் மீது அதிக விமர்சனம் வைக்கப்படுவதும், அதனால் நான் பாதிக்கப்பட்டிருப்பதும் உண்மைதான். ஆனால் அந்த விமர்சனங்களால் நான் என்னை மெருகேற்றிக்கொண்டிருக்கிறேன். என்னை விமர்சிப்பவர்களின் கருத்தை உள்வாங்கி, அதை சரிசெய்ய முயற்சிக்கிறேன். எனக்கு பொருந்தும் கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன். பல தடைகள் வந்தாலும், மலையாள சினிமாவில் பணியாற்றுவது எனக்கு பிடித்திருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.






