

சென்னை,
இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘சிறை’ திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் விக்ரம் பிரபுவுடன் அக்ஷய்குமார், அனீஷ்மா, ஆனந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குனர் தமிழ் எழுதிய திரைக்கதையில் உருவான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரையரங்குகளை தொடர்ந்து ஓடிடி தளங்களிலும் இந்த படம் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்தநிலையில், படத்தின் 75வது நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் நேற்று வெற்றி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எழுத்தாளரும் இயக்குனருமான தமிழ் பேசும்போது, சமீப காலமாக சினிமா பெரிய பட்ஜெட்டுகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது என்று கூறினார்.
“பெரிய பட்ஜெட்டுக்கு பின்னால் ஓடுவதால் அடுத்தடுத்த படங்களின் படப்பிடிப்பு தாமதமாகி, திரையரங்குகளுக்கு படம் வருவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் இந்திய சினிமா தமிழ் சினிமாவை திரும்பிப் பார்த்தது. ஆனால் இப்போது நாம் மற்ற சினிமாக்களை, குறிப்பாக மலையாள சினிமாவை பார்த்து பிரமிக்கிறோம். அங்கே சிறந்த எழுத்தாளர்கள் இருப்பதால் அந்த படங்கள் சிறப்பாக உருவாகின்றன.
அதே நேரத்தில், இந்தியாவிலேயே அதிகமான எழுத்தாளர்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான். அதிகமான புத்தகங்கள் விற்பனையாகும் மாநிலமும் தமிழ்நாடு தான். ஆனால் நாம் எழுத்தாளர்களை மதிப்பதில்லை; அவர்களை சினிமாவுக்கு அழைப்பதுமில்லை. எழுத்தாளர்களை அழைத்து, அவர்களின் கதைகளை படமாக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது லட்சக்கணக்கான மக்களின் வாழ்வியலாக உள்ளது. அதனால் டிஜிட்டல் மற்றும் ஓடிடி தளங்களை மட்டும் நம்பாமல், திரையரங்குகளை மையமாகக் கொண்டு படங்களை உருவாக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.