எளிய மக்களின் இசையை திரையில் கொண்டுசேர்த்தவர் தேவா - ஹிப்ஹாப் ஆதி இரங்கல்

இசையமைப்பாளரும் பாடகருமான தேவா இன்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார்.
எளிய மக்களின் இசையை திரையில் கொண்டுசேர்த்தவர் தேவா - ஹிப்ஹாப் ஆதி இரங்கல்
Published on: 

எளிய மக்களின் இசையை திரையில் கொண்டுச் சேர்த்த மாபெரும் கலைஞரான தேவா என்றென்றும் நினைவுக் கூறப்படுவார் என்று ஹிப் ஹாப் தமிழா ஆதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் தேவா காலமானார்

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75. இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், தேவா உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். மனசுக்கேத்த மகராஜா என்ற திரைப்படத்தின் மூலம், 1986ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா. தமிழக அரசின் கலைமாமணி விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில அரசு விருது உள்ளிட்ட விருதுகளை தேவா பெற்றுள்ளார். இசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்த தேவா மறைவுக்கு அரசியல், திரைப்பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

தேவா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இசை உலகிற்கு ஆற்றிய சேவையை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை நுங்கம்பக்கம் இல்லத்தில் தேவாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரைப் பிரபலங்கள் பலர் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நேரில் அஞ்சலி

நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் முதல்-அமைச்சர் விஜய் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ஹிப்ஹாப் ஆதி இரங்கல்

சமீபத்தில் வெளியான ‘மீசைய முறுக்கு 2’ படத்தில் கானா பாடல்கள் குறித்தும் அதன் எழுச்சி குறித்தும் ஹிப்ஹாப் ஆதி பேசியிருந்தார்.

இந்த நிலையில், தேவா மறைவுக்கு அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘மீசைய முறுக்கு-2’ படத்தின் உருவாக்கத்தின் போதும், வெளியீட்டின் போதும் அவரோடு உரையாடிய அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை. சமீப காலத்தில் அவரோடு நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

எந்தவித பின்புலமும் இல்லாமல் கலைத் துறையில் நுழைந்து மிகப்பெரிய வெற்றிச் சிகரங்களைத் தொட்டு ஏராளமானோருக்கு முன்மாதிரியாக திகழ்ந்த ஒருவரை தமிழ்ச் சமூகம் இழந்துள்ளது. எளிய மக்களின் இசையை திரையில் கொண்டுச் சேர்த்த மாபெரும் கலைஞரான தேவா என்றென்றும் நினைவுக் கூறப்படுவார். தேவா அப்பாவின் குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், ரசிகர்களில் ஒருவனாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com