தேவா அண்ணன் மறைவு என் மனதை மிகவும் தொந்தரவு செய்கிறது - நடிகர் வடிவேலு

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா சென்னையில் நேற்று காலமானார்.
தேவா அண்ணன் மறைவு என் மனதை மிகவும் தொந்தரவு செய்கிறது  -  நடிகர் வடிவேலு
Published on: 

இசையமைப்பாளர் தேவா மறைவு குறித்து வீடியோ மூலம் நடிகர் வடிவேலு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா (75 வயது) நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

தேவா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இசை உலகிற்கு ஆற்றிய சேவையை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இறுதிஊர்வலம்

சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட தேவாவின் உடல் இறுதிச் சடங்குக்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான சக்கரமல்லூருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தேனிசைத் தென்றல் தேவாவின் உடல்அங்கு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

நேரில் அஞ்சலி

ரஜினிகாந்த், கமல், முதல்-அமைச்சர் விஜய் உள்பட பல பிரபலங்கள் நேரில் சென்று தேவா குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்தனர்.

தேவாவின் உடல் இன்று ஆற்காடு அருகே அவரது சொந்த ஊரான சக்கரமல்லூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

வீடியோ வெளியிட்ட நடிகர் வடிவேலு

இந்த நிலையில், நடிகர் வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், “இசையமைப்பாளர் தேவா அண்ணன் திடீரென மறைந்தது உண்மையிலேயே அதிர்ச்சியாக இருக்கிறது. மிக நல்ல மனிதர். என்னைப் பார்த்தால் வாங்க வடிவேலு தம்பி என அன்புடன் அழைத்துப் பேசுவார். மொத்த குடும்பத்திற்கும் ஒரே ஆளாக அனைவரையும் நன்றாகப் பார்த்துக்கொண்டார். அவர் இறந்ததும் அக்குடும்பத்தினர் அழுவதைக் கண்டால் நம் குடும்பத்தில் ஒருவருக்கு ஆனது போல் இருக்கிறது. தேவா அண்ணன் மறைந்தது என் மனதை மிகவும் தொந்தரவு செய்கிறது. அண்ணனின் குடும்பம் எப்போதும் தைரியமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்.” என தன் இரங்கலை பதிவு செய்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com