தனுஷ் - ஐஸ்வர்யா: விவாகரத்து வழங்கியது கோர்ட்டு

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தனுஷ் - ஐஸ்வர்யா: விவாகரத்து வழங்கியது கோர்ட்டு
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் நடிகர் தனுசுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

தனுஷ்-ஐஸ்வர்யா இடையேயான பிரச்சினையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர். இதனையடுத்து, இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில், 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும்' என கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த குடும்பநல கோர்ட்டு, தனுஷ்-ஐஸ்வர்யாவை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து அந்த மனு நீதிபதி சுபாதேவி முன்னிலையில் கடந்த 2-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணையை 21-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் இருவரும் ஆஜராக உத்தரவிட்டார்.

இதனையடுத்து அன்று, விவகாரத்து வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது திருமண பந்தத்தில் இருந்து பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிமன்றத்தில் இருவரும் தெரிவித்தனர்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் 27-ம் தேதி அதாவது இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்று நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், 2004-ம் ஆண்டு நடைபெற்ற திருமண பதிவை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com