234 தொகுதிகளிலும் நற்பணி இயக்கத்தை விரிவுபடுத்தும் தனுஷ்

உள்ளாட்சித் தேர்தலில் நற்பணி இயக்க நிர்வாகிகள் போட்டியிடுவதற்கான முன்னோட்டமாக விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
234 தொகுதிகளிலும் நற்பணி இயக்கத்தை விரிவுபடுத்தும் தனுஷ்
Published on: 

தமிழகத்தில் தனது நற்பணி இயக்கத்தை 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் பணிகளில் நடிகர் தனுஷ் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் அரசியலில் அடியெடுத்து வைக்க இருக்கும் நிலையில், அவரது அடுத்த மூவ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றினார் தனுஷ். அதுமட்டுமல்லாமல், தனது பிறந்த நாள் விழாவில் மக்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்க வேண்டும் என பேசியிருந்தார்.

234 தொகுதிகளிலும் நற்பணி இயக்கம்

தனுஷ், தனது நற்பணி இயக்கத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். தற்போது மாநிலம் முழுவதும் 58 அமைப்பு ரீதியான மாவட்ட அலகுகள் செயல்பட்டு வரும் நிலையில், அடுத்த கட்டமாக தமிழ்நாட்டின் 38 வருவாய் மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட மாவட்ட அமைப்புகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திரைத்துறையில் அறிமுகமாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் தனுஷ், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், தனது ரசிகர் மன்றத்தை மாநிலம் தழுவிய ஒரு கட்டமைக்கப்பட்ட மக்கள் நல இயக்கமாக மாற்றும் இந்த நடவடிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் அவரது அரசியல் வருகை குறித்த ஊகங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்த தனுஷ் உத்தரவு

நற்பணி இயக்கத்தின் அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துமாறு நிர்வாகிகளுக்கு நடிகர் தனுஷ் அறிவுறுத்தியுள்ளதாக இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி கோயம்புத்தூரில் மாவட்ட அளவிலான நிர்வாகிகளுடன் தனுஷ் ஆலோசனை நடத்தினார். கோவையில் அவரது ரசிகர் மன்றம் முறைப்படி நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 25-ஆம் தேதி சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகளுடன் தனுஷ் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்திற்கு முன்னதாக, பெண் ஆதரவாளர்களை அடையாளம் கண்டு அவர்களை இயக்கத்தில் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஏசி வசதியுடன் கூடிய டியூஷன் சென்டர்

தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏசி வசதியுடன் கூடிய டியூஷன் சென்டர் அமைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 1 டியூஷன் சென்டரில் 3 ஆசிரியர்கள், 1 உதவியாளர் என நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு ஊதியமும் நற்பணி இயக்கம் சார்பில் இருந்து தரவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் மாவட்ட தலைநகரங்களில் மட்டும் உருவாக்கப்பட்டு, பின்னர் 234 தொகுதிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை வருகின்ற ஜனவரி மாதம் முதல் தொடங்கும் நற்பணி இயக்கத்தின் சார்பில் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2027 உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கத் திட்டமா?

தனது அரசியல் ஆசைகள் குறித்து தனுஷ் வெளிப்படையாக எதையும் அறிவிக்காத போதிலும், இயக்கத்தின் இந்த அதிரடி விரிவாக்கப் பணிகள் 2027 உள்ளாட்சித் தேர்தலிலேயே அவர் தேர்தல் அரசியலில் களமிறங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களை நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் இருந்து அடையாளம் காணும் ஆலோசனைகளும் நடைபெற்று வருவதாக இயக்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்பு

வெறும் ரசிகர் மன்றச் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பை முன்கூட்டியே உருவாக்குவது இயக்கத்திற்குப் பெரிய பலத்தைத் தரும் என நிர்வாகிகள் நம்புகின்றனர். இயக்கத்தின் விரிவாக்கப் பணிகளின் ஒரு பகுதியாக, மகளிர் அணியை மேலும் வலுப்படுத்துமாறு நிர்வாகிகளுக்கு தனுஷ் உத்தரவிட்டுள்ளார்.

X