

நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகப் பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில், டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது
நடிகர் தனுஷின் ரசிகர் மன்றம் சமீபத்தில் அமைப்புரீதியான மாற்றத்திற்காக, நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டது. கடந்த வாரம் கோவையில் நடைபெற்ற ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த நடவடிக்கை வந்தது. பெயர் மாற்றத்துடன், இயக்கத்திற்கான புதிய கொடி மற்றும் இலச்சினையும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் அதிகரித்துள்ளன.
நடிகர் விஜய் கட்சி தொடங்கி, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அரசியலில் குதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர்களின் சமீபத்திய தீவிர ரசிகர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளே இந்த யூகங்களுக்கு வழிவகுத்தன. தனுஷின் பேச்சுகளும் அவ்வாறே அமைந்தன. இச்சூழலில் அமைப்புரீதியான மாற்றமும் இந்த யூகத்திற்கு மேலும் வலுசேர்த்தது. மேலும் தனுஷ் டெல்லி சென்றதாகவும் கூறப்படுகிறது.
நவம்பர் 25ம் தேதி நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகளை நடிகர் தனுஷ் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து விரைவில் நடிகர் தனுஷ் கட்சித் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் டெல்லி சென்று இருக்கிறார். அங்கே பல அரசியல் விஷயங்களை முன்னெடுக்கப்போகிறார். குறிப்பாக, தனது கட்சியை பதிவு செய்யப்போகிறார். சில முன்னணி அரசியல் தலைவர்களை சந்தித்து பேசப் போகிறார். அரசியல் வியூகங்கள் சிலரிடம் ஆலோசனை கேட்கப்போகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதற்காகத் தேர்தல் ஆணையத்தில் பெயரைப் பதிவு செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
தனுஷின் டெல்லிப் பயணம், ரசிகர் மன்றத்தின் மறுசீரமைப்பு, புதிய கொடி அறிமுகம் என அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அவரது அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், அவரது வருகை தமிழகத்தில் உள்ள பல கட்சிகளுக்கும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.