'துருவ நட்சத்திரம்' படம் கண்டிப்பாக வெளியாகும் - இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்


துருவ நட்சத்திரம் படம் கண்டிப்பாக வெளியாகும் - இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்
x

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’

சென்னை,

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. அதன் பிறகு ரிலீஸ் தேதி குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை.

தற்போது 'துருவ நட்சத்திரம்' எப்போது வெளியாகும் என ஆர்வத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு நல்ல தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கவுதம் வாசுதேவ் மேனனிடம் மதகஜராஜா திரைப்படம் நீண்ட வருடங்களுக்கு பின்னர் வெளியானதை போல் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகுமா? என்பது போன்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கவுதம் மேனன், "மதகஜராஜா திரைப்படம் வெற்றி பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தாமதமாக வெளியாகும் படங்கள் கூட ரசிகர்களை வெகுவாக கவர்கிறது என்பது எனக்கு உத்வேகத்தை தருகிறது. துருவ நட்சத்திரம் திரைப்படமும் கண்டிப்பாக வெளியாகும். அந்தப் படம் இப்பொழுதும் போன வாரம் எடுக்கப்பட்ட படம் போல் தான் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு என பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இவரது இயக்கத்தில் தற்போது 'டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்' எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற 23ம் தேதி திரைக்கு வருகிறது.

1 More update

Next Story