

‘துரந்தர் 2’ திரைப்படம் வரும் 10ம் தேதி ஜப்பானில் வெளியாக உள்ளதையொட்டி, ரன்வீர் சிங் ஜப்பான் ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. இந்த படத்தை பி62 ஸ்டூடியோஸ், ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தன.
அதனை தொடர்ந்து, துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி வெளியானது. பாகிஸ்தானில் செயல்படும் இந்திய உளவாளியின் விறுவிறுப்பான கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், 3 மணி 49 நிமிடங்கள் நீளமுடையதாகும். வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், ரூ.1,800கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ‘துரந்தர் 2’ படம் கடந்த ஜூன் 5ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் 2’ படம் ஜப்பானில் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் ரன்வீர் சிங் ஜப்பான் ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “ஜப்பானில் உள்ள அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். ‘துரந்தர் 2’ திரைப்படம் ஜூலை 10-ஆம் தேதி ஜப்பானில் வெளியாகிறது. அதீத எமோஷன், ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான கதைகளத்தைக் கொண்ட ஒரு பிரம்மாண்ட சினிமா அனுபவத்தை இப்படம் உங்களுக்கு வழங்கும். இந்தியாவின் மிகச்சிறந்த, மிகப்பெரிய இந்தத் திரைப்படத்தை பெரிய திரையில் பார்த்து ரசிக்குமாறு உங்களை அன்போடு அழைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.