அப்போ புரியல, இப்போ புரியுது - ரஜினி குறித்து நடிகை கஸ்தூரியின் பதிவு

விஜய் 118 எம்எல்ஏகள் ஆதரவு பெற முடியாமல் திணறி வரும் நிலையில், ரஜினி குறித்து நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.
அப்போ புரியல, இப்போ புரியுது -  ரஜினி குறித்து நடிகை கஸ்தூரியின் பதிவு
Published on

சென்னை,

தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் த.வெ.க. அதிகபட்சமாக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் த.வெ.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார். அதன்படி, விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று, கவர்னர் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால் 108 என்ற எண்ணிக்கையுடன் அதைச் சாத்தியப்படுத்துவது கடினம். மேலும், சட்டசபையில் த.வெ.க.வைச் சேர்ந்த ஒருவர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டு, அவரின் மூலம் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பெரும்பான்மை வாக்கெடுப்பும் நடைபெறும்.

இதில் சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. மேலும், த.வெ.க. தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒன்றை மட்டும் வைத்துக்கொள்ள முடியும்; இதனால் ஒரு தொகுதியை த.வெ.க. இழக்கும். எனவே த.வெ.க.வுக்கு சட்டசபையில் 106 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கும். பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும். தனித்து போட்டியிட்டதால் த.வெ.க.வுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை. எனவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவளித்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும் என்று சூழல் நிலவியது. த.வெ.க. வெளிப்படையாக எந்த கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை என்றாலும், பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

விஜய் 118 எம்எல்ஏகள் ஆதரவு பெற முடியாமல் திணறி வரும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக நேற்று இரவு செய்தி பரவியது. ஆனால் அதை திமுக மறுத்திருக்கிறது.

ரஜினி, ஸ்டாலினை சந்தித்து பேசியதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு எழுந்திருக்கிறது. தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தனது ஆதரவு எப்போதும் இருக்கும் என ரஜினி கூறியதாக செய்தி வெளியாகி இருந்தது. இந்த சந்திப்பு குறித்து “அப்போ புரியல, இப்போ புரியது” என நடிகை கஸ்தூரி கமெண்ட் செய்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் பேசும் போது, நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க. மிரட்டலால்தான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைத்துறையினர் வரை பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

பெரும் புயலை கிளப்பிய இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த மார்ச் 17ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, “காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com