திரையுலகில் சோகம்... நடிகர் திலீப் ராஜ் மாரடைப்பால் மரணம்

அவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகில் சோகம்... நடிகர் திலீப் ராஜ் மாரடைப்பால் மரணம்
Published on

பெங்களூரு,

பிரபல கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ் (47) மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார். பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு கன்னட திரையுலகிலும் ரசிகர்களிடையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2005-ம் ஆண்டு வெளியான ’பாய் பிரெண்ட்’திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான திலீப் ராஜ், தனது முதல் படத்திலேயே ‘சிவா’ என்ற கதாபாத்திரத்தில் கவனம் பெற்றார். பின்னர் ’மிலனா’ திரைப்படத்தில் நடிகர் புனீத் ராஜ்குமாரின் சகோதரராக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து ‘பிரச்சாயா’, ‘நன்னி பாரு’, ‘பார்டர்’, ‘பஞ்சாம்ருதா’ உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் திலீப் ராஜ்.

’ஜனனி’ தொடரின் மூலம் சின்னத்திரை பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் தயாரிப்பாளராகவும் வெற்றி கண்டார். தனது மனைவி ஸ்ரீவித்யா உடன் இணைந்து ‘டி2ஆர் மீடியா புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் கீழ் பல வெற்றி தொடர்களை தயாரித்துள்ளார்.

அவர் தயாரித்து நடித்த ’ஹிட்லர் கல்யாணம்’ தொடரில் அபிராம் ஜெயசங்கர் கதாபாத்திரத்தின் மூலம் மேலும் பிரபலமானார். நடிகராக மட்டுமல்லாமல் திறமையான டப்பிங் கலைஞராகவும் திலீப் ராஜ் அறியப்பட்டார். அவரது மறைவுக்கு கன்னட திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com