

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ படம் ‘The Good Doctor’ என்ற ஹாலிவுட் தொடரின் காபி என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதற்க்கு பதில் அளித்து இருக்கும் அஸ்வத் மாரிமுத்து, அது போலியான செய்தி என விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173-வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்பட்ட இந்தப் படத்தை முதலில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் சுந்தர்.சி இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் அவர் விலகியதால், ‘டான்’ படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் அவரும் இந்த படத்தில் இருந்து விலகிய நிலையில், ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்க ஒப்பந்த செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். மேலும், பிரபல இயக்குநர் ஷங்கர் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், மலையாள நடிகர் பாசில் ஜோசப் ரஜினிகாந்தின் மகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜினிகாந்தை மையமாகக் கொண்ட சிறப்பு அதிரடி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘தலைவர் 173’ படத்தின் டைட்டில் கடந்த ஜூன் 24ம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி, இந்த படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதோடு ‘தர்மன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆக்சன் கலந்த கதையாக உருவாகவுள்ள இப்படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார். இது, படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார். அன்பறிவ் சகோதரர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்ற உள்ளனர்.
‘தர்மன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இதில், மருத்துவர் வேடத்தில் ரஜினி போஸ் கொடுக்கும் காட்சி கவனம் பெற்று வருகிறது.
ரஜினி நடிப்பில் உருவாகும் ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில் ‘தர்மன்’ படம் ‘The Good Doctor’ என்ற ஹாலிவுட் தொடரின் காபி என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் 'THE GOOD DOCTOR' தொடரின் உரிமத்தை வாங்கியுள்ளதாகவும், 'தர்மன்' திரைப்படம் அதன் தழுவலாக இருக்கலாம் எனவும் பரவிய தகவலை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மறுத்துள்ளார்.
அதற்க்கு பதில் அளித்து இருக்கும் அஸ்வத் மாரிமுத்து, அது போலியான செய்தி என விளக்கம் கொடுத்திருக்கிறார்.