“மஞ்ஞுமல் பாய்ஸ்” இயக்குநரின் புதிய பட அறிவிப்பு

‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ பட இயக்குநரின் புதிய படத்திற்கு ‘பாலன் தி பாய்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சிதம்பரம் இயக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.‘ஜான் ஈ மன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழிலேயே இப்படம், ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 225 கோடி வசூலித்து சாதனை செய்தது. இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதிய கதையைப் படமாக்குகிறார்.
இந்த நிலையில், இப்படத்திற்கு ‘பாலன் தி பாய்’ எனப் பெயரிட்டுள்ளதைப் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். படத்திற்கு சுஷின் ஷியான் இசையமைக்க, சிஜு காலித் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது. அவர்கள் தயாரிக்க உள்ள பெரிய பான்-இந்தியா படங்களில் விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’, மற்றும் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ ஆகியவை அடங்கும்.
படத்தின் டைட்டில் போஸ்டரில், சட்டையின்றி, கருப்பு நிற ஷார்ட்ஸ் அணிந்த, கையில் ஒரு குச்சி பிடித்த சிறுவன், நிர்வாண கால்களில் நடந்து செல்கிறார். அவரை பின்புறம் இருந்து காட்டும் அந்த போஸ்டர், ஒளிமயமான பின்னணியில் வண்ணமயமான மலர்கள் மற்றும் கொடிகள் வரைந்த அலங்காரத்துடன் வெளியாகியுள்ளது.
‘பாலன்’ என்பது மலையாள சினிமாவின் முதல் ஒலிப்படத்தின் (1938) பெயரும் ஆகும். ‘விகதகுமாரன்’ மற்றும் ‘மார்த்தாண்ட வர்மா’ ஆகியவற்றிற்கு பின் மலையாளத்தில் வெளிவந்த மூன்றாவது படம் அது என்பதும் குறிப்பிடத்தக்கது.






