

நடிகர் சூர்யாவின் 45-வது படம் ‘கருப்பு’ . இந்தப் படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக திரிஷா நடித்துள்ளார். மேலும் நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோரும் ‘கருப்பு’ படத்தில் இடம் பெற்றுள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இப்படம் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல்முறையாக அறிவிக்கப்பட்டது. சூர்யா வழக்கறிஞராக நடித்திருப்பதால் கதை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால் இந்த படம் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. படத்தின் ஓடிடி உரிமை விற்கப்படாமல் இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்று இந்தியா-நியூசிலாந்து இடையேயான டி20 ஓவர் உலகக் கோப்பை பைனல் போட்டியில், ‘கருப்பு’ படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி வர்ணனையாளராக பங்கேற்றிருந்தார். அவர் போட்டியின் நடுவே நான் எடுத்த கருப்புபடம் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை என்று பேசியது இணையத்தில் வைரலானது.
படத்தின் ரிலீஸ் குறித்து கடந்த மாதம் நடந்த ஒரு கல்லூரி நிகழ்வில், சம்மரில் தேர்தலுக்குப் பிறகு படம் வெளியாகும் என தெரிவித்தார். இதனிடையே சமூக வலைதளத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி தான் இப்படம் வெளியாகும் என ஒரு தகவல் உலா வந்தது.
இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜி மீண்டும் பட ரிலீஸ் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “உங்களின் வெயிட்டிங்கிற்கு வொர்த்தாக இருக்கும். இனிமேல் நான் நிறைய டைம் எடுத்துக்கிற ஐடியாவில் இல்லை. அதாவது இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாளில் செம்ம அப்டேட் வரும். அதில் ரிலீஸ் தொடர்பான எல்லா அப்டேட்டும் இருக்கும். ஆனால் கண்டிப்பாக ஏப்ரல் 10ஆம் தேதி படம் ரிலீஸ் கிடையாது. எனக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டை, இசையமைப்பாளருக்கும் சண்டை என சொல்றீங்க. எனக்கு தெரியும் நீங்க எல்லாரும் கொஞ்சம் கடுப்புல இருக்கீங்கன்னு. ரொம்ப நாள் வெயிட் பன்றது கடுப்பாகும், அதை நான் மதிக்கிறேன். ஆனால் என்னை நம்புங்க கண்டிப்பாக இந்த படம் உங்களுக்கு பிடிக்கும்” என்றார்.