தவெகவில் இணைந்த திரைப்பட இயக்குநர் ஆர்.வி உதயகுமார்

அதிமுகவில் இருந்து விலகிய திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தவெகவில் இணைந்துள்ளார்.
தவெகவில் இணைந்த திரைப்பட இயக்குநர் ஆர்.வி உதயகுமார்
Published on

1988-ம் ஆண்டு ‘உரிமை கீதம்’ திரைப்படத்தினை இயக்கி திரையுலகிற்குள் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.வி. உதயகுமார். இவர் கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், சிங்கார வேலன், எஜமான், பொன்னுமணி, ராஜகுமாரன், சுபாஷ் என பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இவர் திரையுலகில் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் ரஜினிகாந்த், விஜயகாந்த், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். 80 மற்றும் 90களில் முன்னணி இயக்குநராக விளங்கிய இவர், தற்போது சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஆர்.வி. உதயகுமார் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக மற்றும் முக்கிய நிர்வாகியாகப் பணியாற்றியுள்ளார்.மூத்த இயக்குநர் ஆர்.கே. செல்வமணி மற்றும் பிறருடன் இணைந்து சங்கத்தின் பொறுப்புகளை வகித்தார்.அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஆர்.வி. உதயகுமார் தேர்தல் பிரச்சாரங்களிலும் கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். இவர் அதிமுக கட்சியின் கலை பிரிவு செயலாளர் பதவி வகித்து வந்தார்.

சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகுவதாக திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் அதிமுக தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தார்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ஆர்.வி உதயகுமார், முதல்-அமைச்சர் விஜய்யை பாராட்டி பேசியிருந்தார். அதில் “நிறைய ஹீரோக்கள் முயற்சி செய்தும் முடியாததை முதல் முயற்சியிலேயே சாதித்த முதல்வராக விஜய் அமர்ந்திருப்பதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.எம்.ஜி.ஆருக்கு பிறகு ஒரே அடியில் அடித்தது விஜய்தான். நிச்சயமாக, இன்னும் 2 தலைமுறைக்கு அவர் இந்த ஆட்சியிலே இருப்பார் என்று நான் உறுதியாக கூறுகிறேன். விஜயிடம் இருக்கும் விவேகம் அளப்பரியது. அந்த விவேகத்திற்கு தோல்வியே கிடையாது. நம்முடைய குடும்பத்திலிருந்து ஒருவர் வரும்போது வாழ்த்துவோம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நடந்தது. த.வெ.க.வில் இணைந்து அரசியல் பயணத்தின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார். அமைச்சர்கள் என். ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com