"மனுசி" படத்திற்கு தணிக்கை சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து வெற்றிமாறன் வழக்கு


மனுசி படத்திற்கு தணிக்கை சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து வெற்றிமாறன் வழக்கு
x
தினத்தந்தி 2 Jun 2025 9:44 PM IST (Updated: 2 Jun 2025 9:50 PM IST)
t-max-icont-min-icon

'அறம்' பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் 'மனுசி' படம் உருவாகியுள்ளது.

சென்னை,

கிராஸ் ரூட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித்திருந்தார்.

இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் 'மனுசி' படத்தை தயாரித்துள்ளார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆன்ட்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.நயினாரும் வெற்றிமாறனும் ஒரு படத்தில் இணைந்துள்ளதாலும் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தின் டிரையிலர் வெளியிடப்பட்டது.

இப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்துள்ளது. இப்படம் மாநில அரசை மோசமாக சித்தரிப்பு உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தணிக்கை சான்று மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிபுணர் குழு அமைத்து 'மனுசி' படத்தை மீண்டும் தணிக்கை செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரியும், பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தணிக்கை சான்று மறுத்து உத்தரவு பிறப்பிக்கும் முன், தணிக்கை வாரியம் தன் தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கவில்லை எனவும், தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களை தனக்கு தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சிகளை எடிட் செய்ய தயாராக இருப்பதாகவும், படத்தை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கக் கோரிய தனது விண்ணப்பத்தின் மீது விரிவான உத்தரவை பிறப்பிக்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story