கேரளா: கஞ்சா வைத்திருந்த சினிமா டைரக்டர்கள் கைது

மலையாள சினிமா துறையில் போதைப்போருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவனந்தபுரம்,
பிரபல மலையாள நடிகை வின்சி அலோசியஸ். இவர் தான் நடிக்கும் படத்தின் நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாகவும், தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், மலையாள சினிமா உலகில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளதாகவும் கூறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் ஷைன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதேவேளை, மலையாள சினிமாவில் போதைபொருள் புழக்கம் தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் கஞ்சா பயன்படுத்துவதாக போதைபொருள் தடுப்பு பிரிவினருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பிரபல மலையாள சினிமா டைரக்டர்களான கலீத் ரகுமான், அர்ஷப் ஹம்சா மற்றும் அவரின் நண்பர் ஷலிப் முகமது ஆகியோர் உயர் ரக கஞ்சா பயன்படுத்தியது தெரியவந்து. அவர்களிடமிருந்து 1.63 கிராம் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
கஞ்சா வைத்திருந்த டைரக்டர்களான கலீத் ரகுமான் சமீபத்தில் வெளியான ஆலப்புழா ஜிம்கானா படத்தை இயக்கியுள்ளார். அர்ஷப் சமீபத்தில் வெளியான தமாஷா படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






