

சென்னை,
நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் 2022-ல் வெளியான படம் 'கோப்ரா'. இந்த படத்தை 'டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள்' போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார்.
மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படம், கொரோனா காலத்தில் தொடங்கப்பட்டதால், படப்பிடிப்பில் அடிக்கடி தடை ஏற்பட்டது. அதன்பின்னர், ஒரு வழியாக படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று பிளாப் ஆனது.
'கோப்ரா' படத்தின் பிளாப் குறித்து அஜய் ஞானமுத்து ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதில் "நான் தயாரிப்பாளரிடம் ஒரு கதையை சென்னேன், ஆனால் அவர் வேறொரு கதையை சொல்லி அதை படமாக்க சென்னார். அந்த கதையை நான் ஏற்றுக்கொண்டது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு" என்று அஜய் ஞானமுத்து கூறி இருக்கிறார்.