

சென்னை,
கடந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.வுக்கு 108 இடங்கள் கிடைத்தது. இருந்தபோதும் பெரும்பான்மை இல்லாததால், அந்த கட்சியால் உடனடியாக ஆட்சி அமைக்க இயலவில்லை. எனவே தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் தொடரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தன. அதைத்தொடர்ந்து கடந்த 10-ந்தேதி முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்றார்.
தமிழ்நாடு அமைச்சரவை வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்-அமைச்சருமான விஜய்யின் தலைமையில் பட்டியலினத்தைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.
ஆட்சியில் இருந்த திமுகவை எதிர்த்து அரசியல் பிரசாரங்களை மேற்கொண்டது மட்டும் இல்லாமல், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் திமுக கூட்டணிக் கட்சிகளை திமுகவிடம் இருந்து கைப்பற்றி விட்டார். கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது எல்லாம் இதற்கு முன்னர் யாருமே செய்யாதது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து தவெக கூட்டணியை மேலும் பலப்படுத்தி திமுகவை அரசியல் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட தோற்றத்தை உருவாக்கி விட்டது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் திமுகவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்து தவெக அமைச்சரவையில் இடம் பெற்ற கட்சிகள் குறித்து திமுக முன்னணி பொறுப்பாளர்கள், இரண்டாம் கட்டத் தலைவர்கள் என பலரும் மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.
திமுக எம்.பி ஆ.ராசா மிக காட்டமான விமர்சனத்தை விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீக் மீது வைத்து இருந்தார். அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து தனது பதிவை அழித்த ஆ.ராசா, புதிய பதிவு ஒன்றை போட்டுள்ளார். ஆ.ராசா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: "என் வீட்டு தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் முடத்தெங்கு என பெயர். இலக்கியத்தில் முடத்தெங்கு - அரசியலில் என்ன பெயர்?" என்று பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் தளத்தில் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார். அதில் “அதிகாரம் இழந்த வெறியில் இன்னும் இன்னும் ஆழமாக தனது அசலான அதிகார வெறி கொண்ட அருவருப்பான தன்மையை நன்றாகப் பாருங்கள் என்று தன்னைத்தானே தோலுரித்து காட்டிக் கொண்டிருக்கிறது திமுக” என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது பேசு பொருளாக மாறியது மட்டும் இல்லாமல், திமுகவினர் மீது பலரும் தற்போது முன் வைக்கும் விமர்சனமாகவும் உள்ளது.
அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்பெல்லாம் இருந்த அமைச்சரவையை காட்டிலும் அதிக அளவில் இடம் கொடுத்திருப்பதை இயக்குநர் பா. ரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
விஜய்சேதுபதி தயாரிப்பில் உருவான‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தை இயக்கியவர் லெனின் பாரதி. ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா நடிப்பில் கடந்த 2018ல் வெளியான ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ பல விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.