ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை -டிஎன்ஏ பரிசோதனையில் தகவல்

மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்தப்பட்டு சீல் வைத்த கவரில் முடிவுகள் சென்னை ஐகோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு  மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை -டிஎன்ஏ பரிசோதனையில் தகவல்
Published on

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்திலும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்குத் தடை விதிக்கக் கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதற்கிடையில், ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தான் தந்தை என டிஎன்ஏ சோதனையில் உறுதியானால் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்க தயார் என சென்னை ஐகோர்ட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு தெரிவித்திருந்தது.

வழக்கு விசாரணையில் சென்னை ஐகோர்ட் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பரிசோதனை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக வழக்கறிஞர் ஆணையர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டு, அதன் முடிவுகள், மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் முன், சீல் வைத்த கவரில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக, வழக்கறிஞர் ஆணையர் தெரிவித்தார். ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையில் மத்தியஸ்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஜூன் 8 ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com