"மக்களின் தீர்ப்பை அதிகாரத்தால் தடுக்காதீர்கள்!" - விஜய்க்கு ஆதரவாக இயக்குனர் திருச்செல்வம் குரல்!

வெற்றி பெற்றவருக்கு தோல்வி வழங்கப்படுவது ஜனநாயகம் ஆகாது என்று பேசி இயக்குனர் திருச்செல்வம் வீடியோ வெளியிட்டுள்ளார்.
"மக்களின் தீர்ப்பை அதிகாரத்தால் தடுக்காதீர்கள்!" - விஜய்க்கு ஆதரவாக இயக்குனர் திருச்செல்வம் குரல்!
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், தற்போதுள்ள தவெகவின் பலம் 112 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் தவெகவுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.

தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கேட்டு,  தவெக தலைவர் விஜய், கவர்னர் அர்லேகரை சந்தித்தார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என கவர்னர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் எஞ்சிய 6 இடங்களுக்காக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்டுள்ளார். அவர்கள் இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளனர்.

இதற்கிடையில் தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்காத நிலையில், இயக்குனர் திருச்செல்வம் விஜய்க்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், "வணக்கம்..இன்றைய அரசியல் சூழ்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தனித்துவமாக 108 தொகுதிகளோடு வெற்றி பெற்றிருக்கிறார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய். அவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் தீர்மானித்து விஜய்யை தேர்ந்தெடுத்துவிட்டார்கள். இப்போது அவரைத் தடுப்பது என்பது ஜனநாயக மரபு இல்லை. அதிகாரம் கொண்டோர் அதை தடுப்பது என்பது தவறு. அவர் தன்னுடைய செல்வாக்கை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும். அதற்கான களத்தையும், நேரத்தையும் அவருக்கு தர வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம். பெரும்பான்மையான மக்கள் அவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மற்றவர்கள் எதிர்கட்சிகளாக அமர்ந்து அவர் செயல்பாடுகளில் குறை இருந்தால் அவரை விமர்சிக்கலாம். அவர் குறைபாடுகளுடன் ஆட்சி நடத்தினால் அடுத்த தேர்தலில் மக்கள் அதற்கான தீர்ப்பை அவருக்கு வழங்குவார்கள். வெற்றி பெற்றவருக்கு தோல்வி வழங்கப்படுவது ஜனநாயக மரபு ஆகாது" என்று பேசியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com