

கொச்சி,
கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்து டாக்டரை தாக்கி செல்போன்களை பறித்த சம்பவத்தில் நடிகை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரளம் மாநிலம் கொச்சி அருகே புதிய காவு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் அதுல்யா சந்திரா (வயது 32). வக்கீல். பிரபல நடிகையான இவர், தமிழ், மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2-ந் தேதி தனது நண்பரான 41 வயது டாக்டரை, கொச்சி அருகே பொன்னூரணி பகுதியில் பிரபல நடிகர் பிபின் பெரும்பள்ளி (43) என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புக்கு வருமாறு அழைத்து உள்ளார்.
அப்போது தனது தாயின் சகோதரி உடல்நிலை பாதித்து உள்ளார். உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். அவசரமாக வந்து பரிசோதனை செய்ய வேண்டும் என்று டாக்டரை வரவழைத்ததாக கூறப்படுகிறது. இதை நம்பி டாக்டர் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று உள்ளார். அங்கு நடிகை அதுல்யா சந்திரா உடன் நடிகர் பிபின் பெரும்பள்ளி, பெரும்பாவூர் அருகே வெங்கோலா ஆலின் சுவடு பகுதியை சேர்ந்த ரவுடி விஷ்ணு (31) மற்றும் 9 பேர் அடங்கிய கும்பல் இருப்பதை பார்த்தார்.
ஆனால், குடியிருப்பில் நோயாளிகள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. பின்னர் டாக்டரை, பிபின் பெரும்பள்ளி கன்னத்தில் அறைந்து உள்ளார். மேலும் அவரை தடுத்து நிறுத்தியதோடு, நாற்காலியில் அமர வைத்து கைகளை கட்டி தாக்கியதாக தெரிகிறது. பின்னர் டாக்டரிடம் ஸ்மார்ட் கைகெடிகாரம், ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2 செல்போன்களை விஷ்ணு பறித்துள்ளார். தொடர்ந்து டாக்டரை கும்பல் தாக்கியது.
ஒரு வழியாக அங்கிருந்து தப்பிய டாக்டர், சம்பவம் குறித்து கடவந்தரா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிபின் பெரும்பள்ளி, விஷ்ணு, அதுல்யா சந்திரா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது சட்ட விரோதமாக ஆட்களை சிறைபிடித்தல், கொலை மிரட்டல், திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் அந்த டாக்டர் மீது நடிகை அதுல்யா சந்திராவின் உறவினரான 50 வயது பெண் ஒருவர் கொச்சி இன்போ பார்க் போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில், தன்னை வீட்டுக்கு வரவழைத்து மயக்க மருந்து கொடுத்து டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர் பெண்ணை பலாத்காரம் செய்த டாக்டரிடம், நடிகை மற்றும் அவரது கூட்டாளிகள் ரூ.3 கோடி கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து டாக்டர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம், இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.