விமர்சனங்களுக்கு அஞ்சக்கூடாது... நடிகைகளுக்கு காஜல் அகர்வால் கூறிய அட்வைஸ்

சினிமா துறையில் நடிகர்களை விட நடிகைகளுக்கு தான் ஏராளமான சோதனைகள் தயாராக இருக்கும் என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
விமர்சனங்களுக்கு அஞ்சக்கூடாது... நடிகைகளுக்கு காஜல் அகர்வால் கூறிய அட்வைஸ்
Published on: 

சென்னை,

இங்கு விமர்சனங்களும் எளிதாக நடிகைகளை நோக்கி ஈட்டி போல பாய தயாராக இருக்கும். ஆனால் அதை எல்லாம் கடந்து தைரியமாக நகர்ந்தால் தான், வெற்றி என்ற இலக்கை அடைய முடியும். இங்கு சோதனைகளை கடந்தால் தான் சாதனை என்ற இலக்கை அடைய முடியும். என தெரிவித்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த காஜல் அகர்வாலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கொஞ்சல் நடிப்பாலும், வஞ்சமில்லா சிரிப்பாலும் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த காஜல் அகர்வால் 2020-ம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு கணவர், குழந்தை என குடும்ப வாழ்க்கையில் பிசியான காஜல் அகர்வால், சில ஆண்டுகள் சினிமாவில் 'பிரேக்' எடுத்தார். தற்போது காஜல் அகர்வால் மீண்டும் முன்பு போல படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் 'ராமாயணா' திரைப்படத்தில் யாஷ் ஜோடியாக அதாவது ராவணன் மனைவி மண்டோதரி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார். தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால் நடித்த இந்தியன்-3 திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

தனது திரை பயணம் குறித்து காஜல் அகர்வால் கூறுகிறார்...

"நான் சினிமாவுக்கு வருவேன் என்று பெரிய அளவில் கனவு கண்டதில்லை. ஒரு கட்டத்தில் அது நடந்தது. ரசிகர்களின் அன்பாலும், வரவேற்பாலும் தொடர்ந்து படங்கள் நடித்தேன். நிறைய கதாபாத்திரங்களில் நடித்து விட்டேன்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முக்கிய தருணம். அந்த தருணத்தை நானும் சந்தித்து விட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறேன். நடிகைகளுக்கு திருமணம் ஆகி விட்டாலே சினிமா மார்க்கெட் போய்விட்டது என்று பேசி விடுவார்கள். அது மிகப்பெரிய சோதனை என்று தான் சொல்ல வேண்டும். அதனை நான் தாண்டி வந்துள்ளேன்.

நடிகைகளுக்கு அதிக சோதனை

சினிமா துறையில் நடிகர்களை விட நடிகைகளுக்கு தான் ஏராளமான சோதனைகள் தயாராக இருக்கும். இங்கு விமர்சனங்களும் எளிதாக நடிகைகளை நோக்கி ஈட்டி போல பாய தயாராக இருக்கும். ஆனால் அதை எல்லாம் கடந்து தைரியமாக நகர்ந்தால் தான், வெற்றி என்ற இலக்கை அடைய முடியும். இங்கு சோதனைகளை கடந்தால் தான் சாதனை என்ற இலக்கை அடைய முடியும்.

எனவே திறமை மீது நம்பிக்கை வைத்து களமிறங்க வேண்டும் என்பதுதான் நடிகைகளுக்கு நான் சொல்லிக் கொள்வதாகும். வயதைக் காட்டியோ, இன்னும் சில காரணங்களுக்காகவோ யாரும் நமது திறமையை சாய்த்து விட முடியாது. விமர்சனங்களுக்கு அஞ்சாமல் ஓடத் தொடங்கினால் யாரும் எதுவும் செய்து விட முடியாது”. என்றார்.

X