

மும்பை,
ராமாயணா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது பேசிய நடிகர் யாஷ், ராமாயணா படத்தில் உள்ள குறைகளை எல்லாம் பெரிதுபடுத்தாதீர்கள் என தெரிவித்துள்ளார்.
வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராமாயணா’. இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கின்றனர்.
இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்றும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
இதற்கிடையில், ராமாயணா படத்தின் புதிய டிரெய்லர் வெளியானது. இந்த புதிய டிரெய்லரில் ராமர் மற்றும் ராவணன் இடையிலான மோதல் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ராமராக வரும் ரன்பீர் கபூர், தீமையை அழித்து ராவணனை வீழ்த்துவதாகச் சபதம் எடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மறுபுறம், மூன்று உலகங்களையும் ஆளும் வலிமை கொண்டவனாக ராவணன் சித்தரிக்கப்பட்டுள்ளார். தேவர்களின் படையுடன் ராவணன் மோதும் காட்சிகளும், சீதையைக் கடத்தும் சம்பவத்தின்போது ஜடாயு ராவணனை எதிர்த்துப் போராடும் காட்சிகளும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. ராமர் - சீதை இடையிலான உணர்வுப்பூர்வமான தருணங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பிரம்மாண்டமான போர்க் காட்சிகள், ராட்சதர்களுடன் ராமர் மோதும் காட்சிகள் மற்றும் சிறப்பான கிராப்பிக்ஸ் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது
இந்த நிலையில், ராமாயணா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது பேசிய நடிகர் யாஷ், ராமாயணா படத்தில் உள்ள குறைகளை எல்லாம் பெரிதுபடுத்தாதீர்கள் என தெரிவித்துள்ளார். அதாவது, “தயவுசெய்து விஎப்எக்ஸ்-ல் உள்ள சிறிய குறைகளையோ அல்லது இது போன்ற மற்ற சிறு விஷயங்களையோ பெரிதுபடுத்திப் பார்க்காதீர்கள். இது போன்றதொரு வாய்ப்பு மீண்டும் கிடைக்க பல ஆண்டுகள் ஆகலாம். இவரைப் போன்ற திறமையாளர்களை நாம் இப்போது இழந்துவிட்டால், அது நம்மைப் பின்னோக்கித்தான் அழைத்துச் செல்லும். இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலக ரசிகர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்... இந்தப் படம் உங்களுக்குப் பிடித்திருந்தால், நம்மிடையேயான கருத்து வேறுபாடுகளை மறந்து, அனைவரும் ஒன்றிணைந்து, இந்தியத் திரையுலகால் எத்தகைய சாதனைகளைச் செய்ய முடியும் என்பதை உலகிற்கே காட்டிக் கொடுப்போம்!” என்று தெரிவித்துள்ளார்.