"காந்தாரா கதாபாத்திரத்தை பொதுவெளியில் அவமதிக்க வேண்டாம்"- ரிஷப் ஷெட்டி வேண்டுகோள்

காந்தாரா படம் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படவில்லை என்று ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார்.
சென்னை,
கன்னட திரைப்படமான 'காந்தாரா' கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா சாப்டர் 1’ படம் கடந்த 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படத்தில் ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படம் ‘காந்தாரா சாப்டர் 1’. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ‘காந்தாரா’ படத்தின் முன்கதையாக இப்படம் வெளியாகியுள்ளது. வெளியான முதல் நாளில் இருந்தே ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் இப்படம் நல்ல வசூலையும் செய்து வருகிறது.
இந்த நிலையில், ஆர்வமிகுதியின் காரணமாக ரசிகர்கள் சிலர் இப்படத்தில் இடம் பெற்ற தெய்வ கதாப்பாத்திரங்கள் போல் வேடமிட்டு திரையரங்குகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து பேசியுள்ள இயக்குநர் ரிஷப் ஷெட்டி, "காந்தாரா கதாபாத்திரத்தை பொதுவெளியில் அவமதிக்க வேண்டாம். `காந்தாரா சாப்டர் 1' படத்தில் வரும் கடவுள் கதாபாத்திரம் துளு நாடான கர்நாடகாவின் பெருமை. கடவுளின் புனித தன்மை எப்போதும் காக்கப்பட வேண்டும். தெய்வ வழிபாடு என்பது ஒரு ஆழமான ஆன்மிக மரபு. காந்தாரா படம் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படவில்லை. அவமதிக்கும் செயல்கள் எங்கள் மத நம்பிக்கை, துளு சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துகின்றன" என கூறியுள்ளார்.






