‘முதல்-அமைச்சரின் முடிவுகளில் தலையிட வேண்டாம்’ - நடிகர் அருண் விஜய் பதிவு

முதல்-அமைச்சர் விஜய்க்கு திரைத்துறையினரின் பிரச்சினைகள் தெரியும் என்று அருண் விஜய் கூறியுள்ளார்.
‘முதல்-அமைச்சரின் முடிவுகளில் தலையிட வேண்டாம்’ - நடிகர் அருண் விஜய் பதிவு
Published on

சென்னை,

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். அன்றைய தினமே 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வந்தது. இதன் பின்பு, தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது.

இதன்படி முதல்-அமைச்சர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அமைச்சர் ராஜ்மோகனுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் விஷால், அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது வருத்தமளிப்பதாகவும், திரைத்துறை சார்ந்த கோரிக்கைகளை, அனுபவம் இல்லாத ராஜ்மோகனிடம் வைப்பது சரியாக இருக்குமா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், ‘முதல்-அமைச்சரின் முடிவுகளில் தலையிட வேண்டாம்’ என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களின் நம்பிக்கையை வென்று, தேர்தலில் வெற்றி பெற்று, அதன் பிறகு உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள். தயவுசெய்து முதல்-அமைச்சரின் முடிவுகளில் தலையிட வேண்டாம்.

முதல்-அமைச்சர் திரைத்துறையைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு நமது பிரச்சினைகள் தெரியும் என்றும், அவர் நிச்சயமாக நமக்கு உதவுவார் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். தயவுசெய்து அவரது முடிவுகளை மதித்து, மாற்றத்திற்காக காத்திருங்கள். நாம் எந்த முடிவிற்கும் வர வேண்டாம். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com