நளினியுடன் இணைந்ததாக வதந்தி பரப்பாதீர் - ராமராஜன்


நளினியுடன் இணைந்ததாக வதந்தி பரப்பாதீர் - ராமராஜன்
x

நளினியுடன் நான் மீண்டும் இணைவது நடக்காத காரியம். நாங்கள் சேர்ந்துவிட்டோம் என்று யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்டப் படங்களில் நடித்து 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் ராமராஜன். 80-களில் ராமராஜன் நடித்தப் படங்கள் எல்லாம் வெற்றி பெற்று நல்ல வசூல் குவித்தது. தமிழ் சினிமாவின் 80 காலகட்டத்தில் 'நம்பர் ஒன்' நடிகையாக வலம் வந்தவர் நளினி. இவர், முன்னணி நடிகரான ராமராஜனை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். 1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தலைமையில் இந்த திருமணம் கோலாகலமாக நடந்தது. ஒட்டுமொத்த சினிமா துறையினரும் பேசும்படியான திருமணமாக அது அமைந்தது. ராமராஜன் - நளினி தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இனிமையாக போய்க்கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியதை தொடர்ந்து, இருவருமே கருத்து வேறுபாடு காரணமாக 2000-ம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விவாகரத்து பெற்ற நாளில் இருந்து இதுவரை, எந்த இடத்திலும் ஒருவரை ஒருவர் குறை சொல்லியதே கிடையாது. அதிலும் நளினி "இப்போதும் ராமராஜன் மீது எனக்கு காதல் இருக்கிறது. அவர் கொடுத்த காதல் கடிதத்தை இப்போதும் நான் பத்திரமாக வைத்திருக்கிறேன்'' என்று பெருமையாக சொல்லி இருக்கிறார். ராமராஜனும், நளினி பற்றிய எல்லா கேள்விகளுக்கும், 'அவர் மீது அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். எங்காவது பார்த்துக்கொண்டால் கூட நலம் விசாரித்து கொள்வோம்" என்று கூறியுள்ளார்.

அவ்வப்போது ராமராஜனும், நளினியும் இணைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்தநிலையில் ராமராஜனும், நளினியும் மீண்டும் இணைந்துவிட்டதாகவும், அவர்கள் பெற்ற பிள்ளைகளே இருவரையும் சேர்த்து வைத்துவிட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியானது. இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை ராமராஜன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து "நடக்காத ஒரு விஷயத்தை திரித்து பேசுவதில் யாருக்கு அப்படி என்ன ஆனந்தமோ... தெரியவில்லை. நானும், நளினியும் இணைந்துவிட்டோம் என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால் இல்லாத ஒரு விஷயத்தை, இனிமேல் நடக்கவே முடியாத ஒரு விஷயத்தை இட்டுக்கட்டி பேசுவதை ஏற்க முடியவில்லை.நாங்கள் இருவருமே பிரிந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகிவிட்டது. தனிமையாக வாழ நான் பழக்கப்பட்டு விட்டேன். இப்போது வெளியாகும் இதுபோன்ற வதந்திகளால் இருவரது மனமும் துயரப்படும் என்று தெரியாதா? இந்த புரளி கிளம்பியதை தொடர்ந்து பலரும் என்னிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதுவே எனக்கு மனவேதனையை ஏற்படுத்துகிறது.

எனக்கும், நளினிக்கும் எல்லாம் முடிந்துவிட்டது. முடிந்தது, முடிந்து போச்சு. இனி அதில் ஒன்றும் செய்ய முடியாது. நடக்காத காரியம். எனவே இனியும் இப்படி இட்டுக்கட்டி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுகிறேன். என்னை விடுங்கள், என் பிள்ளைகள் இந்த வதந்திகளால் மன உளைச்சல் அடைய மாட்டார்களா? தயவுசெய்து 'சேர்ந்துவிட்டோம்' என்ற வதந்திகளை பரப்பாதீர்கள் " என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story