வீரவசனம் பேசாம உங்க கட்சியோட கொள்கை திட்டத்தை பேசுங்க - விஜய்யை சாடிய சேரன்

சீமானும், அவரின் தம்பி, தங்கைகளும் சட்டசபை செல்ல வேண்டும் என இயக்குநர் சேரன் சமீபத்தில் கூறியிருந்தார்.
வீரவசனம் பேசாம உங்க கட்சியோட கொள்கை திட்டத்தை  பேசுங்க -  விஜய்யை சாடிய சேரன்
Published on

சென்னை,

மதுரைக்கு அருகே பழையூர்ப்பட்டி எனும் கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் சேரன். திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆர்வத்தில் சென்னைக்குக் குடியேறியவர் கே.எஸ்.ரவிகுமார் இயக்குநராக அறிமுகமான ‘புரியாத புதிர்’ படத்திலிருந்து அவருடைய உதவி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார். ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ படங்களில் துணை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘தேசிய கீதம்’, ‘வெற்றிக்கொடி கட்டு’, ‘பாண்டவர் பூமி’ எனத் தொடர்ந்து தரமான படைப்புகளாய் கொடுத்து ரசிகர்கள் விமர்சகர்கள் மனங்களில் மதிப்புக்குரிய படைப்பாளுமையாக நிலைத்து நின்றார் சேரன்.

‘ஆட்டோகிராப்’, ‘தவமாய் தவமிருந்து’ஆகிய திரைப்படங்கள் சேரனை தேசிய அளவில் கவனம் ஈர்த்தன. தங்கர் பச்சான் இயக்கிய ‘சொல்ல மறந்த கதை’ படத்தில் கதாநாயகனாக நடித்த சேரன் முதல் படத்திலேயே ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். கரு.பழனியப்பனின் ‘பிரிவோம் சந்திப்போம்’, ஜெகனின் ‘ராமன் தேசிய சீதை’, மிஷ்கினின் ‘யுத்தம் செய்’, வசந்தின் ‘மூன்று பேர் மூன்று காதல்’ என முக்கியமான இயக்குநர்களின் படங்களில் நாயகனாக நடித்தார் சேரன்

வருகிற தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.சு, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சிக்கு தனது ஆதரவினை தெரிவித்திருந்தார் இயக்குநர் சேரன்.

இந்நிலையில், தவெகவின் தலைவர் விஜய்க்கு தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக சேரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புதுசா கட்சி ஆரம்பிச்சு மக்கள்கிட்ட ஓட்டு கேட்க வந்தா மக்களுக்கு என்ன பிரச்னை இருக்கு அதை தனது கட்சி எப்படி தீர்க்கும், நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம். அதற்கு தன்கிட்ட என்ன என்ன திட்டங்கள் இருக்குன்னு பேசனுமா இல்ல உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா இல்ல நான் வேணுமான்னு கேட்டா அந்த தகுதி போதுமா ஒரு நாட்டை ஆள.. உங்க இருவருக்கும் என்ன ப்ரச்னைன்னு எங்களுக்கு தெரியல. உங்க ரசிகர்களுக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன். அது என்ன எப்ப வந்தாலும் ரெண்டு கட்சிக்குத்தான் போட்டி. அப்படி என்ன உங்களுக்கு திமுக மேல கோபம்னு எங்களுக்கும் சொல்லுங்க விஜய். நாங்களும் சப்போர்ட் பண்றோம்.

சொல்லாம நீங்க மட்டும் சினிமா டயலாக் பேசுனா ஏன் ஓட்டு போடனும்னு மக்கள் கேக்குறாங்கள்ல. இங்க ஐம்பது வருஷமா இருக்க கட்சிகள் மற்றும் பதினைந்து வருஷமா மக்களோட மக்களா களத்துல நின்னு போராடி, புதிய மாற்றத்தோடு தமிழகத்தை உருவாக்க மக்கள்கிட்ட வாக்கு சேகரிக்கும் கட்சிகள் எல்லாம் நிறைய இருக்கு. எந்த விதத்துல நீங்க அந்த கட்சிகளை விட உயர்வு சொல்லுங்க.

எந்த போராட்டத்துல மக்களுக்காக மக்கள் கூட நின்னு இருக்கீங்க இங்க ரெண்டு கட்சிக்குத்தான் போட்டின்னு சொல்ல. மனசாட்சி இல்லைன்னா நீங்க எப்படி மக்கள் தலைவனா மாறுவிங்க விஜய். உழைப்பை முதல்ல மதிங்க. உங்க கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் இல்ல. இனிமேலும் மக்கள்க்கிட்ட வீரவசனம் மட்டும் பேசாம ஒழுங்கா உங்க கட்சியோட கொள்கை திட்டம் எல்லாம் எல்லா இடத்துலயும் பேசுங்க.

ஒவ்வொரு தொகுதிலயும் என்ன பிரச்னைன்னு அலசி ஆராய்ங்க. பொதுவா வீராவேசமா பேச இது அரட்டை அரங்கம் இல்லை. மக்கள் களம். ஏற்கனவே நாங்க 50 வருடத்தை இழந்துட்டு இருக்கோம். இப்போ நீங்க வந்து ஆட்டத்தை கலைக்காதிங்க.. மறுபடியும் மக்கள் பிரச்னை உணராத முதல்வர் எங்களுக்கு வேண்டாம். மக்களோடு மக்களாக நின்று எங்களை, எங்கள் இளையதலைமுறையை வழிநடத்தும் தலைமையே எங்களுக்கு வேண்டும்” என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com