

சென்னை,
ரசிகர்கள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயன், நாம் என்ன செய்தாலும் குறை சொல்லும் கூட்டம், குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்களை கண்டுகொள்ளாமல், நாம் நமது வேலையை பார்த்துக்கொண்டு நதி போல போய்க்கொண்டே இருக்க வேண்டும் என்றார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றி, பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் ரத்ததான முகாம்கள், கல்வி உதவிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவ்வப்போது தனது நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்து வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து நற்பணி இயக்க நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசினார். இதற்காக சென்னை முகலிவாக்கத்தில் சிறப்பு சந்திப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் நிர்வாகிகள் வெள்ளை சட்டை அணிந்து திரண்டு பங்கேற்றனர். இந்த சந்திப்பு கூட்டம் கட்சி மாநாடு போன்று நடைபெற்றது திரையுலகினர் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.
ரசிகர்கள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயன், “நானும், விஜய் சேதுபதி போன்றவர்களும் எந்தவித பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர்கள். கடின உழைப்பால் தான் இந்த நிலையை அடைந்திருக்கிறோம். நாம் என்ன செய்தாலும் குறை சொல்லும் கூட்டம், குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்களை கண்டுகொள்ளாமல், நாம் நமது வேலையை பார்த்துக்கொண்டு நதி போல போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
விமர்சிப்பவர்களைப் பற்றி கவலையே வேண்டாம். அன்புக்காகவே நாம் ஒன்றாக கூடியிருக்கிறோம். அதேவேளை, நன்றாக படியுங்கள், நன்றாக சம்பாதியுங்கள். குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பம்தான் மிகவும் முக்கியம்” என்று குறிப்பிட்டார்.
ரஜினிகாந்த், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தங்களது ரசிகர்களை நேரில் சந்தித்து வரும் நிலையில், தற்போது சிவகார்த்திகேயனும் தனது ரசிகர்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.