'டோரதி' படம் பல விருதுகளை வெல்லும் தகுதி கொண்டது.. நடிகர் ஸ்ரீமன் பாராட்டு

நடிகர் ஸ்ரீமன், 'டோரதி' திரைப்படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
'டோரதி' படம் பல விருதுகளை வெல்லும் தகுதி கொண்டது.. நடிகர் ஸ்ரீமன் பாராட்டு
Published on: 

சென்னை,

விருதுகளுக்கான தேர்வு நேர்மையாக நடைபெற்றால், இப்படம் பல விருதுகளை வெல்லும் தகுதி கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘டோரதி’ திரைப்படம்

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 1990-களின் பின்னணியில், சாதி சார்ந்த வன்முறை மற்றும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் ‘டோரதி’ பெற்றுள்ளது.

திரைப்பிரபலங்கள் பாராட்டு

வெளியானது முதலே ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. நடிகர் தனுஷ், நடிகை ஸ்ரீலீலா, இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, இயக்குநர் ராஜு முருகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் இப்படத்தைப் பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

விருதுகளை வெல்லும் தகுதி கொண்ட படம்

இந்த நிலையில், 'டோரதி' திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ஸ்ரீமன், விருதுகளுக்கான படங்களை உண்மையான தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தால், 'டோரதி' சிறந்த தேர்வாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இப்படம் பல விருதுகளை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்த அவர், படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜையும் பாராட்டியுள்ளார். திரைப்படத்தின் தரம் மற்றும் அதன் உருவாக்கத்தைப் பாராட்டிய ஸ்ரீமனின் இந்தப் பதிவு, படத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com