

சென்னை,
2016 ம் ஆண்டு வெளியான ‘பழைய வண்ணாரபேட்டை’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு ‘திரௌபதி’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது அதன் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார்.இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி'யாக நடித்துள்ளார்.
சரித்திர காலப் படமாக உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் ஜனவரி 23ம் தேதி தள்ளி வெளியானது. இந்த படத்தில் நட்டி, வேலராமமூர்த்தி, நாடோடிகள் பரணி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியான அதே நாளில் அஜித் நடித்த அவரது 50வது படமான ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸானது. இதனால் அஜித் படத்துக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
‘திரௌபதி 2’ படம் ரிலீசான முதல் காட்சியில் இருந்தே மிகப்பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. தியேட்டர்களுக்கு கூட்டம் வராமல் இருந்தது, காட்சிகள் ரத்து செய்யப்பட்டது என பல விஷயங்கள் நடந்தது. இதனால் மோகன் ஜி தனது வருத்தத்தை பதிவு செய்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து பலர் திரௌபதி 2 படம் நன்றாக இருப்பதாக கூறி வருகின்றனர். மோகன் ஜியும் தியேட்டர்களுக்கு சென்று வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதில், யூடியூப் சேனல்களில் ‘திரௌபதி 2’ படத்துக்கு விமர்சனம் சொன்ன சிலரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. அதில், “இது சரியா??? முதல் நாள் முதல் காட்சியிலேயே எல்லா யூடியூப் சேனல்களிலும் போலியான மற்றும் விஷமத்தனமான விமர்சனங்களைப் பரப்பி, எதிர்மறையான கதையை உருவாக்குகிறார்கள்.. இந்த முகங்களால்தான் எல்லா கடின உழைப்பும் வீணானது” என குறிப்பிட்டுள்ளார்