தெலுங்கானா முதல்-மந்திரியை சந்தித்த துல்கர் சல்மான்

தெலுங்கிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் துல்கர் சல்மான்.
ஐதராபாத்,
மலையாள நடிகர் துல்கர் சல்மான், தெலுங்கானா முதல்- மந்திரி ரேவந்த் ரெட்டியை அவரது ஜூபிலி ஹில்ஸில் உள்ள இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும் செருகுரி சுதாகர் ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். இந்த சந்திப்புக்கான காரணங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
மலையாள ஹீரோ துல்கர் சல்மான் சீதா ராமம், லக்கி பாஸ்கர் உள்ளிட்ட தெலுங்கு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து தெலுங்கிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், தெலுங்கானா முதல்- மந்திரியை சந்தித்தது ஏன் என்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில், தெலுங்கானா அரசு ஏற்பாடு செய்த கட்டார் திரைப்பட விருதுகளில் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' மற்றும் 'சீதா ராமம்' படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றன.
'லக்கி பாஸ்கர்' படத்திற்காக சிறப்பு ஜூரி விருதுக்கு துல்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அந்த நேரத்தில் அவர் பிஸியாக இருந்ததால் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.
அதனால்தான் அவர் நேரடியாக முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியை சந்தித்து நன்றி தெரிவித்ததாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.






