"மஞ்சுமெல் பாய்ஸ்" சாதனையை முறியடித்த "எம்புரான்"


மஞ்சுமெல் பாய்ஸ் சாதனையை முறியடித்த எம்புரான்
x

மலையாளத் திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் திரைப்படம் என்ற வரலாறு படைத்தது “எம்புரான்” திரைப்படம்.

திருவனந்தபுரம்,

மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' படத்தின் 2-ம் பாகமாக உருவான 'எல் 2 எம்புரான்' கடந்த 27-ம் தேதி வெளியானது. மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிவேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற புதிய சாதனையை 'எல் 2 எம்புரான்' படைத்திருக்கிறது.இதுவரை ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் ஒரு சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்ட நிலையில் படக்குழு அதற்காக 17 இடங்களில் காட்சிகள் நீக்கி மொத்தமாக 3 நிமிட காட்சிகளை படத்தில் இருந்து எடுத்தனர். நடிகர் மோகன்லாலும் இதற்கு வருத்தம் தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்த சூழலில் 'எல் 2 எம்புரான்' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன்படி, "இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும், வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், இதில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார். நடிகர் மோகன்லால் நடித்துள்ள 'எம்புரான்' திரைப்படத்திற்கு தடை விதிக்க கேரள ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

எம்புரான் திரைப்படத்தில் குஜராத் மதக்கலவரத்தைப்போல காட்சி ஒன்று இடம்பெற்றிருந்ததற்கு வலதுசாரிகள் எம்புரானைக் கடுமையாக விமர்சித்தனர். 2002-ல் நடப்பது போன்ற மதக்கலவரக் காட்சியை 'சில ஆண்டுகளுக்கு முன்' என மாற்றியுள்ளனர். அதேபோல், இஸ்லாமிய பெண்கள் தாக்கப்படும் காட்சிகளை நீக்கியதுடன் இந்து அமைப்பைச் சேர்ந்த முக்கிய கதாபாத்திரங்களான பல்ராஜ் பட்டேல் மற்றும் முன்னா ஆகியோர் பேசும் மத அரசியல் வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன.

படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்து தவறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் போராட்டம் நடத்தியது. இதனிடையே ம.தி.மு.க. நிறுவனர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓ.பன்னீர் செல்வம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் 'எம்புரான்' திரைப்படம் மலையாளத் திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்துள்ளது. மலையாளத் திரையுலகில் அதிக வசூலைக் குவித்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' சாதனையை 'எம்புரான்' திரைப்படம் முறியடித்துள்ளது.

1 More update

Next Story