“என் இனிய பொன் நிலாவே” பாடல் வழக்கு: இளையராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்

பாடலுக்கான உரிமைகள் தங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறி ‘சரிகம’ நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்திருந்தது.
“என் இனிய பொன் நிலாவே” பாடல் வழக்கு: இளையராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
Published on: 

‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் தொடர்பாக இளையராஜா தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. காப்புரிமை வழக்கில் டெல்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்த இளையராஜாவின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு

1980ல் வெளிவந்த ‘மூடுபனி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என் இனிய பொன் நிலவே’ என்ற பாடலின் மறு உருவாக்கம் செய்யப்பட்ட பதிப்பை, இளையராஜாவிடமிருந்து உரிமம் பெற்றதாகக் கூறி வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது ‘அகத்தியா’ திரைப்படத்தில் பயன்படுத்தியதைத் தொடர்ந்து இந்தச் சர்ச்சை தொடங்கியது. பாடலின் அசல் தயாரிப்பாளரிடமிருந்து உரிமைகளைப் பெற்றதன் மூலம் அந்தப் பாடலுக்கான உரிமைகள் தங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறி ‘சரிகம’ நிறுவனம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இடைக்காலத் தடை

பாடலின் இசை அல்லது மெட்டுக்கு மட்டுமே இளையராஜா உரிமை வைத்திருக்கிறார் என்றும், பாடல் வரிகள் அல்லது ஒலிப்பதிவு ஆகியவற்றின் மீது அவருக்கு உரிமை இல்லை என்றும் டெல்லி ஐகோர்ட் கடந்த மே 21ம் தேதி தீர்ப்பளித்தது.

உயர்நீதிமன்றத்தின் மே 21ம் தேதி தீர்ப்பின் சரியானதுதானா என்பதை மறுபரிசீலனை செய்யக் கோரி இளையராஜா ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மறுஆய்வு மனுவை டெல்லி ஐகோர்ட் மே 26 அன்று தள்ளுபடி செய்தது.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

பின்னர், டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக இளையராஜா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இளையராஜா சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இசையமைப்பாளர் இளையராஜாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு மறுத்துவிட்டது. டெல்லி ஐகோர்ட் தீர்ப்பில் தலையிட மறுத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அமர்வு, இளையராஜாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com