“என்ஜாய் எஞ்சாமி” பாடல் சர்ச்சை.. பாடகர் அறிவுக்கு சவால் விடுத்த சந்தோஷ் நாராயணன்

பாடகர் ‘தெருக்குரல்’அறிவு ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
“என்ஜாய் எஞ்சாமி” பாடல் சர்ச்சை.. பாடகர் அறிவுக்கு சவால் விடுத்த சந்தோஷ் நாராயணன்
Published on

தென்னிந்தியாவின் ‘பாப் மேர்லி’ என அழைக்கப்படும் ராப் பாடகர் ‘தெருக்குரல்’அறிவு, இடஒதுக்கீடு குறித்தும், சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராகவும் பாடல்கள் மூலம் மிக அழுத்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். வாரந்தோறும் வடசென்னையில் ஒவ்வொரு தெருவில் அங்குள்ள ராப் பாடகர்களை 'தெருக்குரல்' ஆல்பம் மூலம் ஒன்றிணைத்து பாடல்களை பாடி வரும் அறிவு, துப்புரவுத் தொழிலாளர்கள் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, சாதி அடிப்படையில் மக்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் எனப் பல பிரச்சினைகளைப் பற்றிய பாடல்களைப் பாட வைத்து வருகிறார்.

ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் வெளியான ‘காலா’ திரைப்படத்தில் வரும் ‘உரிமை மீட்போம்’ என்ற பாடல் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் அறிவு. காலாவை தொடர்ந்து வடசென்னை, ஜிப்ஸி உள்ளிட்ட திரைப்படங்களில் இவரது பாடல்கள் பல பாராட்டுகளை பெற்றாலும் விமர்சனங்களும் வந்தன.சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தில் வரும் பருந்தாகுது ஊர் குருவி பாடலை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த அறிவு, தன்னுடைய பாடல் வரிகளில் எப்போதும் சமசரம் செய்துக் கொண்டதில்லை.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் ‘தெருக்குரல்’ அறிவு, தீ பாடிய ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் ஹிட்டடித்தது. யூடியூப்பில் அதிக வியூஸ்களை அள்ளியது. இந்தப் பாடல் வெளியாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என பாடகர் அறிவு ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

அறிவுக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் இடையே பாடலுக்கான காப்பீட்டு உரிமைப் பிரச்னை ஏற்பட்டது. இருவருக்கும் ஆதரவாக இருதரப்பில் இருந்தும் பலர் குரல் எழுப்பினர்.

இது தொடர்பாக பாடகர் அறிவு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என்ஜாய் எஞ்சாமி பாடல் குறித்த விளக்கம். இந்தப் பாடலுக்கான மெட்டு எனக்கு அனுப்பப்பட்டது. என்னுடைய வாழ்க்கை அனுபவம், கலாசார வரலாறு அடிப்படையில் பாடலை எழுதி, பாடி, முதன்மை மெட்டும் அமைத்து நடித்தேன். இதற்கான இசை கூட்டு முயற்சியில் தான் உருவாக்கப்பட்டது. அதேபோல அங்கீகாரமும், ஊதியமும் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும். இந்தப் பாடல் என்னுடைய நிலம் மற்றும் மக்கள், அவர்களின் கதைகளை அடிப்படையாக கொண்டு படமாக்கப்பட்டது. என்னுடைய வரலாறு பெரும்பாலான மக்களுக்கு சென்று சேரும் என்ற நம்பிக்கையில் தான் பகிர்ந்துகொண்டேன். ஆனால், இந்தப் பாடலை எழுதியும், முதன்மை மெலடிக்கு இசையமைத்த போதிலும் ‘featuring artist’ என்றே என்னை குறிப்பிட்டனர்.

அப்போது எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. 5 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பாடலுக்காக என்னுடன் பணியாற்றியவர்கள், அதற்கான உரிமையையும், ராயல்டியையும் பெறுகின்றனர். ஆனால், என்னுடைய உழைப்புக்கான ஊதியமோ, பாடல் மீதான உரிமையோ எனக்கு வழங்கப்படவில்லை. கருணையின் அடிப்படையில் கேட்பது அல்ல. மாறாக இது உரிமை, அங்கீகாரம், உழைப்பவர்களின் கண்ணியம் சார்ந்த கோரிக்கை. தனியிசை கலைஞர்களே, உங்கள் படைப்புகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள். முறையான ஒப்பந்தங்களை போட்டுக்கொள்ளுங்கள். உங்கள் உரிமைகளை தெரிந்துகொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “இது உங்கள் சொந்த கருத்தாக இருக்கலாம். நீங்கள் கோரும் தொழில்நுட்ப அங்கீகாரமும், சட்ட ரீதியான உரிமையும் எப்போதும் நேர்மையற்றதாகவும், கற்பனை நிறைந்ததாகவுமே உள்ளது. நீங்கள் கோரும் ஆதாரத்துடன் நேரடியாக நீங்கள் விரும்பும் ஊடகத்தில் என்னுடன் விவாதிக்க தயாரா? அனைத்து இடத்திலும் நீங்கள் என்னை ப்ளாக் செய்ததால் இங்கே பதிலளிக்கலாம். நான் தயாராக இருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com