குறைவான படங்கள் நடித்தாலும்.. நிறைவாக நடித்து ரசிகர்களை கவரவேண்டும்- ஷ்ரத்தா ஸ்ரீநாத்

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘தி கேம்' என்ற வெப் தொடர், ஓ.டி.டி.யில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
முன்னணி நடிகையான ஷ்ரத்தா ஸ்ரீநாத், சந்தோஷ் பிரதாப் உடன் இணைந்து ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடித்த ‘தி கேம்' என்ற வெப் தொடர், ஓ.டி.டி.யில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
இதுகுறித்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறும்போது, ‘கேம் டெவலப்பர்' தம்பதியைச் சமூக வலைதளங்களின் தாக்கம் எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது? அவர்களை சுற்றியிருப்போரை எப்படியெல்லாம் பாதிக்கிறது? என்பது கதை. 7 எபிசோட்கள் கொண்ட இத்தொடரில் மிகுந்த உழைப்பை ஒட்டுமொத்த படக்குழுவும் கொட்டியிருக்கிறோம்.
என்னை பொறுத்தவரை பொறுப்பான இல்லத்தரசி கதாபாத்திரங்களிலேயே ரசிகர்கள் என்னை ரசிக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ, அந்தவகை கதாபாத்திரங்களே என்னை தேடி வருகின்றன. எனக்கும் காதல், ரொமான்ஸ் படங்களில் நடிக்க ஆசை தான். இன்னும் சொல்லப்போனால் ரகசிய உளவாளி போன்ற கதாபாத்திரங்களில், திரில்லர்-ஆக்ஷன் படங்களில் நடிக்க ரொம்பவே ஆசைப்படுகிறேன்.
நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என்பது என் இலக்கில்லை. நடிக்கும் படங்கள் குறைவாக இருந்தாலும், அதில் நிறைவாக நடித்து ரசிகர்களை கவரவேண்டும். இதுவரை எந்த கிசுகிசுக்களிலும் சிக்காமல் என் வண்டி ஓடுகிறது. விமர்சனம் எழுவதுபோல் நான் நடந்துகொள்ளாததே காரணம், என்றார்.






