இப்போது பார்த்தாலும் நரம்பு முறுக்கேறி இரும்பாகிவிடுகிறது.. வைரமுத்து

பாட்ஷா படம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இப்போது பார்த்தாலும் நரம்பு முறுக்கேறி இரும்பாகிவிடுகிறது.. வைரமுத்து
Published on

சென்னை,

ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான 'பாட்ஷா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் ரகுவரன், நக்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் பாட்ஷா திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் பாட்ஷா திரைப்படத்துக்குச் சென்று கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பாட்ஷா படம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ,

"பாட்ஷா படத்தின்

மறு வெளியீடு

சில தகவல்களைப்

பரிமாறுமாறு கூறுகிறது

"எட்டு எட்டா மனுஷ வாழ்வப் பிரிச்சுக்கோ" என்றபாட்டு

அவசரம் கருதி

எட்டே நிமிடத்தில் எழுதப்பட்டது

"தங்க மகன் இன்று

சிங்க நடை போட்டு" என்றபாட்டு

ஆண் குரலுக்காக மட்டும்

அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு

ஜேசுதாசால் பாடப்பட்டுப்

பதிவு செய்யப்பட்டது

அதில்

'ரெண்டு புறம் பற்றி

எரியும் மெழுகாக' என்ற வரியை

'ரண்டு' புறம் என்று

பாடியிருக்கிறார் பாடகர்

நான் எவ்வளவோ முயன்றும்

அதை மீண்டும்

திருத்த இயலவில்லை

அமெரிக்காவில் இருந்து

வைரமுத்து வரட்டும் என்று

பாராட்டு விழாவைத்

தள்ளி வைத்திருந்தார் ரஜினி

எம்.ஜி.ஆரின் உச்சம்

நாடோடி மன்னன்

ரஜினியின் உச்சம் பாட்ஷா

இந்த இரண்டு

வெற்றிப் படங்களிலும்

சம்பந்தப்பட்டவர் ஆர்.எம்.வீ

என்று பாராட்டினேன்

"இந்த நாட்டை

ஆண்டவனாலும்

காப்பாற்ற முடியாது"

என்ற சர்ச்சைப் பேச்சுப்

பேசப்பட்டதும் அங்கேதான்

ஆர்.எம்.வீரப்பனின்

அமைச்சர் பதவி

பறிக்கப்பட்டதும்

அதைத் தொடர்ந்துதான்

தமிழ்நாட்டின்

கலை அரசியலோடு

கலந்துபோன படம் பாட்ஷா

அதில்

எனக்குப் பிடித்தது

சண்டைக்குத் தயாராகும்முன்

ரஜினி சொல்லும் வசனம்

"உள்ளே போ"

இப்போது பார்த்தாலும்

நரம்பு முறுக்கேறி

இரும்பாகிவிடுகிறது

இதை ரஜினியிடமே சொல்லியிருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com