ஜிஎஸ்டி வரி குறைந்தாலும் தியேட்டர் கட்டணத்தில் மாற்றமில்லை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

தியேட்டர் கட்டணம் குறையும் என தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
ஜிஎஸ்டி வரி குறைந்தாலும் தியேட்டர் கட்டணத்தில் மாற்றமில்லை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி
Published on

சென்னை,

டெல்லியில் நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி இனி 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் வரிகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. 28 சதவீத வரி நீக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை குறைகிறது. இதனால் தியேட்டர் கட்டணமும் குறையும் என தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அதுபோல் நடக்கவில்லை. 100 ரூபாய்க்கு குறைவான டிக்கெட் கட்டணம் வைத்துள்ள தியேட்டர்களில் மட்டும் ஜிஎஸ்டி வரி, 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையிலும் மற்ற நகரங்களிலும் எந்த தியேட்டரிலும் 100 ரூபாய்க்கு குறைவாக டிக்கெட் கட்டணமே கிடையாது. சில குக்கிராமங்களில் மட்டும் 100 ரூபாய்க்கு குறைவாக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அந்த தியேட்டர்களில் கூட புதிய படங்கள் ரிலீசாவதில்லை.

இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறும்போது, தமிழ்நாட்டில் எந்த தியேட்டருக்கு போனாலும் 100 ரூபாய்க்கு மேல்தான் டிக்கெட் கட்டணம் உள்ளது. அதிலும் நகரங்களில் ரூ.200 வரை டிக்கெட் விற்கப்படுகிறது. இந்த டிக்கெட்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி உள்ளது. இதை 5 சதவீதமாக குறைக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால் குறைக்கப்படவில்லை. அப்படி குறைத்தால் 200 ரூபாயில் 25 ரூபாய் வரை மக்களுக்கு டிக்கெட் கட்டணம் குறையும். ஆனால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தியேட்டர் கட்டணத்தில் மாற்றம் செய்யாதது ஏமாற்றம் தருகிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com