"பதவி மாறினாலும் நீங்கள் மாறவில்லை" - விஜய்யின் செயலை பாராட்டிய விஷால்

உங்கள் பதவிக்காலத்தில் தமிழகம் சிறந்த நிலையை அடையட்டும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
"பதவி மாறினாலும் நீங்கள் மாறவில்லை" - விஜய்யின் செயலை பாராட்டிய விஷால்
Published on

சென்னை,

நடிகர் விஷால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

அன்பிற்குரிய முதலமைச்சர் விஜய் அவர்களே,

லயோலா கல்லூரிக் காலத்திலிருந்தே நான் உங்களை 'டார்லிங்' (darling) என்றுதான் அழைத்து வருகிறேன்; அந்த அன்பான விளிப்பு இன்றும் மாறவில்லை. வளர்ந்து வரும் நட்சத்திரமாக உங்களை எனக்குத் தெரிந்ததிலிருந்து, பல தடைகளையும் விமர்சனங்களையும் உங்கள் மௌனத்தாலும் வெற்றியாலும் கடந்து 'சூப்பர் ஸ்டார்' அந்தஸ்தை அடைந்து, பின்னர் தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சராக உயர்ந்த உங்களின் பயணத்தை நான் நேரில் கண்டிருக்கிறேன்.

இன்று உங்கள் பதவியும் பொறுப்பும் மாறியிருக்கலாம், ஆனால் நீங்கள் மாறவே இல்லை. உங்களைச் சந்தித்ததும், அதே பழைய அன்பையும் அரவணைப்பையும் உணர்ந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கலைஞர் ஐயா, ஜெயலலிதா அம்மா, ஸ்டாலின் அங்கிள் மற்றும் என் அன்பு நண்பர் உதயநிதி எனப் பலரையும் கண்ட எனக்கு, நம் மாநிலத்தின் முதலமைச்சரையும் அதே 'டார்லிங்' என்ற அன்பான சொல்லால் அழைத்தது நெகிழ்ச்சியாக இருந்தது. எனக்குள் இருக்கும் அந்த ரசிகனின் உணர்வு என்றும் மாறாது.

கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். வழக்கமாக வழங்கப்படும் பூங்கொத்து மற்றும் பொன்னாடையை ஏற்காமல், அதற்குப் பதிலாக அந்தப் பணத்தைக் கொண்டு தமிழகத்தில் உள்ள தகுதியுள்ள, பின்தங்கிய நிலையில் உள்ள மூன்று பெண் குழந்தைகளின் கல்விக்கு உங்கள் பெயரிலேயே உதவியதை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. அந்தச் சிறுமிகள் உங்களை நினைத்து என்றும் பெருமை கொள்வார்கள்.

மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துகள் முதலமைச்சர் அவர்களே. உங்கள் பதவிக்காலத்தில் நேர்மறையான மாற்றங்களும் வளர்ச்சியும் பெருகட்டும்; தமிழகம் சிறந்த நிலையை அடையட்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விஷாலின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com