

நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘கான் சிட்டி’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தை பார்த்த பிரபல தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அவரது கருத்து தற்போது திரையுலகில் கவனம் பெற்று வருகிறது.
மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் அர்ஜுன் தாஸ். தொடர்ந்து கதாநாயகனாகவும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் அவர், தற்போது அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். நகரத்தில் வாழும் நடுத்தர குடும்பத்தின் உணர்வுகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் மையமாகக் கொண்ட கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், படத்தை முன்னதாக பார்த்த தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் தனது சமூக வலைதளப் பதிவில், “‘கான் சிட்டி’ ஒரு விறுவிறுப்பான திரையனுபவத்தை வழங்குகிறது. மேலும், படம் முடிந்த பிறகும் அதன் தாக்கம் மனதில் நீடிக்கும். சிறப்பான கதை சொல்லலும் தரமான உருவாக்கமும் இப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக மாற்றியுள்ளது. எப்போதும் உள்ளடக்கம்தான் ராஜா என்பதை ‘கான் சிட்டி’ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் ஒரு திறமையான படைப்பாளர். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று பாராட்டியுள்ளார்.
இந்த பாராட்டு பதிவு ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.