ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்... காயம் குறித்து ராஷ்மிகா விளக்கம்

'மைசா' படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு எதிர்பாராத விதமாக தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்... காயம் குறித்து ராஷ்மிகா விளக்கம்
Published on

சென்னை,

'மைசா' படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு வலது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இது குறித்து தற்போது நடிகை தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் 'மைசா' என்ற தெலுங்கு படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். ஆக்ஷன் திரில்லரான 'மைசா' படத்தில், கோண்டு இனத்தைச் சேர்ந்த பெண்ணாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்திற்காக முக்கிய சண்டைக் காட்சிகள் மற்றும் நீருக்கடிக் காட்சிகளின் படப்பிடிப்பை அவர் அண்மையில் முடித்திருந்தார்.

படப்பிடிப்பில் காயம்

இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு எதிர்பாராத விதமாக தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் காயம் முழுமையாக குணமடைய 6 வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

காயம் குறித்து விளக்கம்

இந்த நிலையில், 'மைசா' படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயம் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது காயம் குறித்து யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்று நினைத்ததாக கூறிய அவர், தற்போது ரசிகர்களுக்காக தனது உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தசைநார் பாதிப்பு

அந்த பதிவில், தனது வலது இடுப்பு பகுதியில் உள்ள நான்கு தசைநார்களில் (Tendons) ஒன்று எலும்பிலிருந்து விலகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக ராஷ்மிகா கூறியுள்ளார். இதனால் கால்களை இயல்பாக தூக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், 'மைசா' படத்தின் நடனக் காட்சி படப்பிடிப்பின்போது இந்த காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

"இது தொடர்ச்சியாக மூன்றாவது காயம்"

கடந்த சில மாதங்களில் தனக்கு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக காயம் ஏற்பட்டிருப்பதாக கூறிய ராஷ்மிகா, தனது உடலை ஒரு இயந்திரம் போல அல்லாமல், மனித உடலாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்த காயம் தாங்க முடியாத அளவுக்கு இல்லை என்றும், ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

கட்டாய ஓய்வில் ராஷ்மிகா

மருத்துவர்களின் ஆலோசனைப்படி தற்போது ஓய்வில் இருக்கும் ராஷ்மிகா, இந்த இடைவெளியில் புதிர் (Puzzle) விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிட்டு வருவதாகவும், உடற்பயிற்சி செய்ய முடியாததால் உடல் எடை அதிகரித்துவிடுமோ என்ற கவலை இருப்பதாகவும் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார். விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் ரசிகர்களை சந்திப்பேன் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com