'ஜனநாயகன்' பார்த்து பாராட்டும் திரைப்பிரபலங்கள்... சமூக வலைத்தளங்களில் குவியும் வாழ்த்துகள்

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

'ஜனநாயகன்' பார்த்து பாராட்டும் திரைப்பிரபலங்கள்... சமூக வலைத்தளங்களில் குவியும் வாழ்த்துகள்
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சரும், நடிகருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

முதலமைச்சராக விஜய்க்கு சிறப்பு டைட்டில் கார்டு

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் நடித்த முதல் திரைப்படம் என்பதால், படத்தின் தொடக்கத்தில் "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்" என்ற சிறப்பு டைட்டில் கார்டு இடம்பெற்றது. இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

'One Last Dance' ஹேஷ்டேக் டிரெண்டிங்

விஜய்யின் இறுதித் திரைப்படம் என்று கூறப்படுவதால், ரசிகர்கள் திரையரங்குகளில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் #OneLastDance என்ற ஹேஷ்டேக் வைரலாகி, ரசிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

திரைப்பிரபலங்கள் பாராட்டு

'ஜனநாயகன்' திரைப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும், தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் படக்குழுவிற்கும், விஜய்க்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். படத்தின் கதை, இயக்கம், இசை மற்றும் விஜய்யின் நடிப்பை பாராட்டி பலரும் பதிவிட்டு வரும் நிலையில், அந்த பதிவுகள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.

அந்த வகையில் நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ள பதிவில், "இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்... அண்ணா, வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே நீங்கள் உண்மையான 'ஜனநாயகன்' ஆகிவிட்டீர்கள்; எங்களுக்குப் பிடித்தமான நடிகராக உங்கள் இயல்பான தன்மைக்கும் கண்ணியமான அணுகுமுறைக்கும் இந்தத் திரைப்படம் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையும். எனவே, எங்கள் அன்பிற்குரிய மற்றும் மதிப்பிற்குரிய முதலமைச்சர் அண்ணா... இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, எங்கள் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கட்டும். உங்களுக்கு வாழ்த்துகளும், இறைவனின் ஆசிகளும் உரித்தாகட்டும்". என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சிபி சத்யராஜ் வெளியிட்டுள்ள பதிவில், "திரையில் உங்களை மிஸ் செய்வோம் விஜய் அண்ணா!'.. ஜனநாயகன், ஆரம்பம் முதல் முடிவு வரை பக்கா மாஸ் மற்றும் முழுமையான பொழுதுபோக்கு படம்; விஜய் அண்ணாவின் ஸ்டைல், ஸ்வாக், ஸ்கீரின் பிரசன்ஸ், நடிப்பு அனைத்தும் வேற லெவல்; திரையில் உங்களை மிகவும் மிஸ் செய்வோம் விஜய் அண்ணா; இத்தனை ஆண்டுகளாக ரசிகர்களுக்கு தந்த மறக்க முடியாத தருணங்களுக்கு நன்றி!" என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், "இது வெறும் வெளியீடு மட்டுமல்ல, இது வரலாற்றில் ஒரு முக்கிய தருணம். எனது அன்புச் சகோதரரும், தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சருமான அவர்களுக்கு எனது வாழ்த்துகள். நடிகர் விஜய் மற்றும் ஒட்டுமொத்த 'ஜனநாயகன்' குழுவினருக்கும் மிகப்பெரிய வெற்றி கிடைக்கட்டும். உங்கள் ரசிகர்களுக்கு ஒரு இறுதித் திரைப்பட விருந்தை அளிக்கும் அதே வேளையில், மக்கள் சேவையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவது உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளது. மக்கள் மீதும் சினிமாவின் மீதும் நீங்கள் கொண்டுள்ள அன்பை இது மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகிறது. முழு குழுவினருக்கும் மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்! (ONE LAST DANCE)" என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அஜய்ஞானமுத்து வெளியிட்டுள்ள பதிவில், "அந்த கடைசி சில நொடிகள்.. தலைவா திரையில் உங்களை மிஸ் பண்ணுவேன்.. எல்லாவற்றிற்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com