அதிமுகவில் இருந்து திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் விலகல்

அதிமுக கட்சியின் தற்போது நிலை குறித்து ஆழ்ந்த வேதனையும் கவலையும் அடைந்துள்ளதாக இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் விலகல்
Published on

1988-ம் ஆண்டு ‘உரிமை கீதம்’ திரைப்படத்தினை இயக்கி திரையுலகிற்குள் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.வி. உதயகுமார். இவர் கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், சிங்கார வேலன், எஜமான், பொன்னுமணி, ராஜகுமாரன், சுபாஷ் என பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இவர் திரையுலகில் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் ரஜினிகாந்த், விஜயகாந்த், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். 80 மற்றும் 90களில் முன்னணி இயக்குநராக விளங்கிய இவர், தற்போது சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஆர்.வி. உதயகுமார் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக மற்றும் முக்கிய நிர்வாகியாகப் பணியாற்றியுள்ளார்.மூத்த இயக்குநர் ஆர்.கே. செல்வமணி மற்றும் பிறருடன் இணைந்து சங்கத்தின் பொறுப்புகளை வகித்தார்.அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஆர்.வி. உதயகுமார் தேர்தல் பிரச்சாரங்களிலும் கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். இவர் அதிமுக கட்சியின் கலை பிரிவு செயலாளர் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் “மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அவர்களுக்கு, வணக்கம். நான் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கழக உறுப்பிளராகவும், தற்போது மாநில கலைப்பிரிவு செயலாளராகவும் உள்ளேன். கட்சியின் தற்போது நிலை குறித்து ஆழ்ந்த வேதனையும் கவலையும் அடைந்துள்ளேன். தற்போதுள்ள மன நிலையில் கட்சியில் தொடர விருப்பம் இல்லாததால் எனது கலைப்பிரிவு செயலாளர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் என்பதிலிருந்தும் விலகிக்கொள்கிறேன். தற்போது வரை எனது பணியில் துணை நின்ற தங்களுக்கும், முன்னாள் அமைச்சர் பெருமக்களுக்கும் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும் நகர, பேரூராட்சி, வட்ட, பகுதி கழக நிர்வாகிகளுக்கும், எனது நன்றியிளை கணத்த இதயத்துடன் தெரிவித்து விடைபெறுகிறேன்.” என்று கூறியுள்ளார்.

நடிகை கவுதமியை தொடர்ந்து ஆர்வி உதயகுமாரும் அதிமுகவிலிருந்து விலகியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com