

சென்னை,
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னை அம்பத்தூரில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு முழுவீச்சில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கிய தகவலை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கடந்த 2021-ம் ஆண்டு நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தில் பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ‘சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம், முதல் பாகத்தின் நேரடி தொடர்ச்சியாக இல்லாமல், அதற்கு முந்தைய காலகட்டத்தில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்ட ‘ப்ரீக்வெல்’ கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
படத்தின் கதை 1940 மற்றும் 1950-களின் சென்னை பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் நிலவிய குத்துச்சண்டை கலாச்சாரம், சமூக வாழ்க்கை மற்றும் அரசியல் சூழலை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், முதல் பாகத்தைப் போலவே இந்த படத்திலும் அக்கால சென்னையின் வாழ்க்கை முறையை திரையில் விரிவாக காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னை அம்பத்தூரில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு முழுவீச்சில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கிய தகவலை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.