"இதுபோன்ற படங்கள் தெலுங்கு சினிமாவுக்கு அவசியம்"... சமந்தாவின் படத்தை பாராட்டிய சிரஞ்சீவி!

புடவை அணிந்தபடி சமந்தா நடித்த ஆக்ஷன் காட்சிகள் மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்திருந்தது என சிரஞ்சீவி பாராட்டியுள்ளார்.
"இதுபோன்ற படங்கள் தெலுங்கு சினிமாவுக்கு அவசியம்"... சமந்தாவின் படத்தை பாராட்டிய சிரஞ்சீவி!
Published on

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதுடன் தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், சமந்தா தயாரித்து நடித்துள்ள புதிய திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ கடந்த 19ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இயக்குநரும், சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமொரு கதை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியானது.

அதிரடி கதாபாத்திரத்தில் மிரட்டும் சமந்தா

இந்தப் படத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிரடி கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்தப் படம் சமந்தாவின் வெற்றிகரமான கம்பேக் படமாக அமைந்துள்ளது. இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் சமந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிரஞ்சீவியின் வாழ்த்து

அந்த வகையில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிகை சமந்தாவை பாராட்டி பதிவிட்டுள்ளார். மேலும் அவர்களுடன் எடுத்த புகைப்படங்களையும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், " ‘மா இன்டி பங்காரம்’ படம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. கூட்டுக்குடும்பப் பின்னணியில் ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகளை அழகாக இணைத்து, இயக்குனர் நந்தினி ரெட்டி தனது தனித்துவமான பாணியில் இப்படத்தை உயிர்ப்புடன் அமைத்து, மிகவும் ரசிக்கும்படியாக உருவாக்கியுள்ளார்.

குறிப்பாக, புடவை அணிந்தபடி சமந்தா நடித்த ஆக்ஷன் காட்சிகள் மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்திருந்தன. பன்முகத்தன்மை கொண்ட மற்றும் பெண்களை மையமாகக் கொண்ட இது போன்ற திரைப்படங்கள் தெலுங்குத் திரையுலகிற்கு மிகவும் அவசியமானவை. இந்த வெற்றிக்கு சமந்தா, நந்தினி ரெட்டி, ராஜ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

அதேவேளையில், தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கவிருக்கும் சமந்தா மற்றும் ராஜ் ஆகிய தம்பதியினருக்கும் சிறப்பான வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com