ஏ.ஐ தொழில்நுட்பத்தில் வெளியான முதல் படம் - ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள 'ஐ லவ் யூ' என்ற படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
ஐதராபாத்,
ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சினிமாத் துறையில் அதன் தாக்கம் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது. இந்நிலையில் முற்றிலும் ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள 'ஐ லவ் யூ' என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது.
90 நிமிடம் கொண்ட இந்த படம் ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு உள்ளது. படத்தில் இடம் பெற்ற 12 பாடல்களும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் இசை அமைக்கப்பட்டன. இதுமட்டுமின்றி ஹீரோ, ஹீரோயின்கள் மற்றும் படத்தின் கதாபாத்திரங்கள் ஏ.ஐ.தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்திய திரை உலகில் முழுக்க முழுக்க ஏ.ஐ. பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த படத்துக்கு யூ/ஏ சான்றிதழை சென்சார்போர்டு வழங்கி உள்ளது. பாடல், கதை, திரைக்கதை மற்றும் இறுதி எடிட்டிங் மட்டுமே மனிதர்களால் செய்யப்பட்டன. பெங்களூரை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப நிபுணரான நரசிம்மமூர்த்தி இந்த படத்திற்கு 30-க்கும் மேற்பட்ட ஏ.ஐ.மென் பொருட்களை பயன்படுத்தி உள்ளார். படம் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.






