

சென்னை,
தென் மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே 2 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையில் குமரி கடல் பகுதி நோக்கி நகர்ந்தது. அது மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த மண்டலமாகி அடுத்த 36 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறி புயலாக தீவிரம் அடையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி இன்று அதிகாலை குமரி கடலில் புயல் சின்னம் உருவானது. அதிகாலை 2.30 மணிக்கு இலங்கையின் கல்லே நகரில் இருந்து 185 கி.மீ. தொலைவிலும், கன்னியா குமரியில் இருந்து தெற்கு மற்றும் தென்கிழக்கில் 210 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டு இருந்தது.
தீவிர புயலாக மாறி கன்னியாகுமரியை நோக்கி நெருங்கி வருகிறது. தற்போது 70 கி.மீ. தொலை வில் குமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.அடுத்த 36 மணி நேரத்தில் 20 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் லட்சத்தீவு நோக்கி மெதுவாக நகர்ந்து வரும்.
புயல் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சரிந்தன. நாகர்கோவிலில் மின்சார டிரான்ஸ்பார்மரும் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சரிந்து விழுந்தது.
மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. வீடுகளும் சேதமடைந்தது.
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.
மாவட்டத்தின் உட்பகுதிகள் மற்றும் கிராமங்களுக்கு போக்குவரத்தும் சீராக நடைபெறவில்லை. இதனால் அலுவலகம் செல்வோர் அவதிக்கு ஆளானார்கள்.
ஓகி புயலால் 4 பேர் பலியாகி உள்ளனர். கன்னியாகுமரியில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது புயல் விலகிச் சென்று உள்ளது. நெல்லை, குமரி மாவட்டங்களில் ஒகி புயலால் ஏற்படும் மின்விநியோக பாதிப்புகளை உடனே சீரமைக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்பகிர்மான கழகம் ஆணை பிறபித்து உள்ளது.
இதுகுறித்து டுவிட்டரில் கமல்ஹாசன் மழையில் மிதக்கிறது கன்யாகுமரி மாவட்டம். இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என கூறி உள்ளார்.