பெண்கள் முன்னேற கல்லூரி வரை இலவச கல்வி வேண்டும் - நடிகை கோமல் சர்மா

இந்தியாவில் இன்றளவும் பெண்களுக்கான கல்வி விகிதம் குறைவாகவே இருக்கிறது என்று நடிகை கோமல் சர்மா தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய 'சட்டப்படி குற்றம்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கோமல் சர்மா. அதன்பிறகு வைகை எக்ஸ்பிரஸ், ஷாட் பூட் த்ரீ, பப்ளிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை கோமல் சர்மா, ராஜசோழன் இயக்கிய 'ஐ.ஏ.எஸ். கண்ணம்மா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ''பெண்கள் முன்னேற்றம் என்பது அவசியமான ஒன்று. இந்தியாவில் இன்றளவும் பெண்களுக்கான கல்வி விகிதம் குறைவாகவே இருக்கிறது. பல ஊர்களில் 10-ம் வகுப்புக்கு மேல் பெண்கள் படிப்பதே கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, கல்லூரி வரை பெண்களுக்கு இலவச கல்வியை அரசு தரவேண்டும். நமது இல்லங்களில் பெண்ணை காட்டிலும் ஆணுக்கே கல்வியில் முன்னுரிமை தரப்பட்டு வருகிறது. எனவே கல்லூரி வரை இலவச படிப்பு சலுகை வழங்கினால் பெண்களும் படிப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.






